
வத்தளை விடுதியொன்றில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு
இலங்கை
டி-56 ரக துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் என்பவற்றை வத்தளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணிகளின் போது பெண்ணொருவரும், ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை, ஹெக்கித்த வீதியில் உள்ள ஒரு விடுதி அறையில் ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வந்ததை அடுத்து, நேற்றுக் காலை இந்த கைது நடந்தது.
விசாரணையில், குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் அந்தப் பெண் இருப்பதை அதிகாரிகள் கண்டனர்.
பின்னர், அந்தப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, 6.1 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு 15 இல் வசிக்கும் 35 வயதான சந்தேக நபர் உடனடியாகக் காவலில் வைக்கப்பட்டார்.
விசாரணையின் போது, அந்தப் பெண் வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், டி-56 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், ராகமவில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர், இது அவரது நண்பரின் வீடு என்று நம்பப்படுகிறது.
மேலும் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்களை பொலிஸார் மீட்டனர்.
இதன்போது, ராகமவில் வசிக்கும் குறித்த பெண்ணின் 40 வயது நண்பரும் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.