• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்களை சந்தித்தார்

இலங்கை

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நடந்த மிக மோசமான இயற்கை பேரழிவுக்கு கவலை தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்குண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் பல பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, தொடர்ந்தும் அங்கு மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பேரழிவுக்கு கவலை தெரிவிக்கும் பொருட்டு, கொழும்பிலுள்ள மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விஜயம் செய்தார்.

இதன்போது, மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்கள் தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.

ஒரு நாடு என்ற வகையில் மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தேவையான பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரின், மாண்டலே உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்குண்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இன்று மியன்மார் தூதுவரை சந்தித்து, எமது நாட்டு மக்களின் கவலையை வெளிப்படுத்தினேன்.

அனர்தத்திற்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்துவகையான உதவிகளை செய்ய தயாராகவுள்ளதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளேன். வளர்ச்சியடைந்த நாடுகள், மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று இவ்வேளையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையும் தன்னால் முடிந்த அனைத்து வகையான நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும். என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
 

Leave a Reply