
வயதாகாமல் இருக்க கழுதை பால் குடிக்க வேண்டும்- நடிகர் விக்ரம்
சினிமா
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நடிகர் விக்ரம், படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வீர தீர சூரன் படம் திரையிடப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மாலை நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்து பேசினர்.
பின்னர் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திரையரங்கில் வீர தீர சூரன் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களில் மக்களின் ஆதரவு இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்கு தான் படம் எடுத்தோம்.
வீர தீர சூரன் படத்தின் பகுதி ஒன்று விரைவில் வரும். இயக்குனர் ரியலிஸ்டிக் மற்றும் மாஸ் இரண்டையும் கலந்து புதிதாக எடுத்துள்ளார். ரசிகர்களுக்காக எடுத்த இந்த படம் இந்தளவிற்கு மக்களிடையே சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடினார்.இதில், ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்றார். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் தெரிவித்து படம் எப்படி இருந்தது எனக்கேட்டார்.
ரசிகர்கள் "ஐ லவ் யூ" எனக் கூறியதற்கு, விக்ரமும் "ஐ லவ் யூ" என்றார். தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து ரசிகருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
அப்போது கூட்டத்தில் ஒரு ரசிகர் நடிகர் விக்ரமனை நோக்கி உங்களைப் போன்று வயசாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய விக்ரம், வயதாவது நல்லது தான்.
வயசாகாமல் இருக்க சனிக்கிழமை தோறும் கழுதை பால் குடிக்க வேண்டும் என நகைச்சுவையாக பதில் அளித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சாமி, அந்நியன் பட வசனத்தை ரசிகர்களிடம் பேசி விக்ரம் அங்கிருந்து கிளம்பி சென்றார்.