• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பின்னணியை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்தும் -ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை

உயிர்த்த ஞாயிறுத்  தாக்குதலுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினரை அடுத்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர், அரசாங்கம் நாட்டு  மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை தெய்யந்தர பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது” உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று  எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடையவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ,இது தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும்,  ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை  மக்களுக்கு வெளிப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவரால்  எத்தனை நாட்களுக்கு தலைமறைவாக இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் தான் தற்போது அச்சமடைந்து ஊடகங்களில் அழுது புலம்புகிறார்கள் எனவும்,  இதனை இரவு நேர செய்திகளில் பார்க்கலாம் எனவும் தெரிவித்த ஜனாதிபதி  வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே தாமே பொறுப்பேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது  சிறந்த திட்டமிடல்களினால் குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை தாம் ஸ்தீரப்படுத்தியுள்ளதாகவும், ஆகவே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வேண்டுமா,  அல்லது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply