• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை

”ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு ஒருபோதும் நிறுத்தப்படாது” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி,  மக்களுக்காகச் சேவை செய்யாத பல அரசியல்வாதிகள் இன்று தோல்வியைத் தழுவியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ”எந்தவகையில் சதிகளும், முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது ஊழல் வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது எனவும்,  பலருக்கு எதிராக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ”சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் தொடர்பில் ஓரிரு மாதங்களில் வழக்கு தொடரப்படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று பல வழக்கு விசாரணைகளிலிருந்து நீதிபதிகள் விலகுகின்றனர்  எனவும்,  இது சிறந்த விடயம்  அல்ல எனவும், நீதிபதிகள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பிலிருந்து விலகக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைதாவார் என வரலாற்றில் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், ஆனால் அது தற்போது நடந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, கடந்த காலங்களில் பொலிஸ்மா அதிபர்கள் கைதாகாமல் இருந்தமைக்கு அவர்களின் நேர்மையே காரணம் என கூறமுடியாது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  பதவி பேதமின்றி எதிர்காலத்தில் மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக அரசியல்வாதிகளுக்காக பணியாற்றிய பல அரச அதிகாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் விசாரணைகளில் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply