
நிலநடுக்கத்தின் கோர தாண்டவம்: 152 பேர் பலி - சீட்டுக் கட்டுகளாக சரிந்த கட்டிடங்கள்
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று நண்பகல் 7.7 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கட்டிடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழ மக்கள் உயிரை காட்பற்றிக்கொள்ள வெளியே ஓடினர். மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திலும், இந்தியாவின் கொல்கத்தா, இம்பால் பகுதிகளிலும், வங்கதேச பகுதிகளிலும் இதன் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் இதுவரை 144 இறப்புகள் பதிவாகியுள்ளன. 732 பேர் காயமடைந்துள்ளனர். அதேசமயம் பாங்காக்கில் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாடுகளிலும் முழுவதும் பல்வேறு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்து உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
91 வருட பழமையான பாலம், கோவில், அடுக்குமாடி கட்டடங்கள் வரை பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அவை நிலநடுக்கத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.