தென் கொரியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ - 16 பேர் உயிரிழப்பு
தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் காயமுற்றுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். எனினும், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.





















