சயீஃப் அலிகான் மீது கத்திக்குத்து - குற்றவாளி பற்றிய மர்மம் நீடிப்பு
சினிமா
பிரபல இந்தி நடிகர் சயீஃப் அலிகான் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்மநபரால் கத்தியால் குத்தப்பட்டார்.
6 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில், அவர் ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அவரது முதுகில் பாய்ந்திருந்த கத்தியின் ஒருபகுதி அகற்றப்பட்டது.
சயீஃப் அலிகானுக்கு நேற்று டாக்டர்கள் மேலும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் தற்போது, முழுமையாக குணமடைந்து வருகிறார். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை பிடிக்க முடியாமல் மும்பை போலீசார் திணறியபடி உள்ளனர். 20 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகிறார்கள். குற்றவாளியின் புதிய படத்தையும் மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சயீஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் எழுந்துள்ளன. சயீஃப் அலிகான் வீட்டுக்குள் மர்மநபர் எப்படி புகுந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக நீடித்துக் கொண்டே இருக்கிறது. சயீஃப் அலிகான் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இதில் துப்புதுலக்க இயலவில்லை.
அதுபோல, சயீஃப் அலிகான் வசிக்கும் 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து கிடப்பதால் குற்றவாளியின் நடமாட்டம் துல்லியமாக தெரியவில்லை. மர்ம நபர் நுழைவாயில் வழியாக வரும் போது காவலாளி அவரை பார்த்தாரா? இல்லையா? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.
சயீஃப் அலிகானை 6 இடங்களில் குத்திவிட்டு மர்ம நபர் தப்பியதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. சயீஃப் அலிகான் தனது வீட்டின் கதவை பூட்டியிருந்தால், குற்றவாளி தப்பி இருக்க முடியாது. சயீஃப் அலிகானை தாக்கிய மர்ம நபர் சுமார் 30 நிமிடங்கள் அந்த வீட்டுக்குள் இருந்துள்ளார்..
அந்த 30 நிமிடங்களில் என்ன நடந்தது என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிய வில்லை. சயீஃப் அலிகான் வீட்டு பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
பணியாளர்களில் யாராவது ஒருவருக்கு மர்ம நபர் தெரிந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சயீஃப் அலிகான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மர்ம நபர் வந்தது முதல் சென்றது வரை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த மர்ம நபர் தப்பிச் செல்லும் போது அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அவருக்கு அந்த பகுதி நன்கு தெரிந்திருக்கலாம் என்பது போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கேமராக்கள் எதிலும் சிக்காதபடி அவர் நழுவிச் சென்றுள்ளார். இதன்மூலம் அவர் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு பல முறை வந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நடிகர் சயீஃப் அலிகான் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக அதிகம் வெளியில் பேச மறுக்கிறார்கள். சயீஃப் அலிகான் போலீசாரிடம் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவா் முதுகில் மர்ம நபர் கத்தியால் குத்திய போது 3 தடவை கத்திக்குத்து விழுந்து உள்ளது. அவரின் தண்டுவட பகுதிக்கு அருகே 2.5 அங்குலம் நீலத்துக்கு கத்தி பாய்ந்து உடைந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதும் போலீஸ் விசாரணையில் மர்மமாக உள்ளது.
மும்பை போலீசார் இந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை காண தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.