நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இத்தனை ஹிட் கொடுத்த எனக்கு இடம் இல்லை - சுந்தர் சி
சினிமா
சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இன்று படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய சுந்தர் சி கூறியதாவது
"நான் எடுக்குற திரைப்படம் மக்கள் ரசிப்பாங்க, வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் எனக்கு மனதோரத்தில் ஒரு வருத்தம் இருக்கிறது. என்னை ஒரு நல்ல இயக்குனர் என ஒரு பாராட்டு கிடைக்காது. நல்ல இயக்குனர்கள் பட்டியலை எடுத்து பார்த்தால் அந்த பட்டியலில் இத்தனை ஹிட் கொடுத்த நான் இருக்க மாட்டேன். சினிமா வந்து ஒரு மிகப்பெரிய பிஸ்னஸ். பல மக்களின் வாழ்க்கை அதில் அடங்கியுள்ளது. மக்கள் 3 மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். எனக்கு நல்ல இயக்குனரென அந்த இடத்தை கொடுக்கவில்லை என்றாலும் நான் அதற்காக கவலைப் பட போவதில்லை. என் ரசிகர்களான தெய்வங்களுக்கு மிக்க நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே" என கூறியுள்ளார்.