ஹாலிவுட்டின் தனித்துவமான இயக்குநர் டேவிட் லிஞ்ச் உயிரிழப்பு
சினிமா
ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளியான டேவிட் லிஞ்ச் காலமானார். கடுமையான புகைப்பழக்கம் கொண்டவரான டேவிட் எம்பைசிமா எனப்படும் நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.
மல்ஹோலண்ட் டிரைவ், ட்வின் பீக்ஸ் போன்ற படைப்புகள் மூலம் மனித இருப்பின் இருண்ட அடுக்குகளை ஆராய்ந்த லிஞ்ச் தனக்குப் பின்னால் தனியானதொரு பாணியை விட்டுச் சென்றுள்ளார்.
லிஞ்சின் குடும்பத்தினர் அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை மூலம் அவரது மரணத்தை அறிவித்தனர்.
அந்த அறிக்கையில், இப்போது அவர் எங்களுடன் இல்லாததால் உலகில் ஒரு பெரிய ஓட்டை உருவாகியுள்ளது. ஆனால், அவர் சொல்வது போல், 'உங்கள் கண்ணை டோனட்டின் மீது வைத்திருங்கள், ஓட்டை மீது அல்ல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1946 இல் மொன்டானாவில் பிறந்த லிஞ்ச், திரைப்பட இயக்குநராக மாறுவதற்கு முன்பு ஒரு ஓவியராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் படமான "எரேசர்ஹெட்" (1977), ஹாலிவுட் சுயாதீன [இண்டி] சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
வழக்கமான கதை சொல்லலை புறக்கணித்து அவர் இயக்கிய "ப்ளூ வெல்வெட்" (1986), "வைல்ட் அட் ஹார்ட்" (1990) மற்றும் "மல்ஹோலண்ட் டிரைவ்" (2001) உள்ளிட்ட திரைப்படங்கள் கவனம் பெற்றன. 1990 களில் "ட்வின் பீக்ஸ்" மூலம் தொலைக்காட்சியில் லிஞ்சின் பிரவேசம் நிகழ்ந்தது.
சிறிய நகரினுடைய இரகசியங்களின் வினோதமான கதையுடன் கூடிய இந்தத் தொடர் தற்காலத்தில் கோலோச்சும் சீரிஸ் வகை படைப்புகளுக்கு முன்னோடியாகும். இத்தகு திரை மேதைமை கொண்ட டேவிட் லின்ச் மரணத்துக்கு உலக சினிமா தூக்கம் அனுசரித்து வருகிறது.























