அதானி விவகாரத்தில் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் மூடல்
அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி மூடப்பட்டதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்தார்.
"கடந்த ஆண்டு இறுதியிலிருந்து நான் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டபடி, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் பணியாற்றி வந்த திட்டங்களை முடித்த பிறகு திட்டம் முடிவடையும். நாங்கள் சமீபத்தில் முடித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட கடைசி போன்சி வழக்குகளின்படி, அந்த நாள் இன்று," என்று ஆண்டர்சன் அறிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அதன் அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரரான அதானிக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்தின. ஹிண்டன்பர்க் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மறுத்தன.
ஜோ பைடன் நிர்வாகத்தின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையவும் ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பே, ஆண்டர்சன் தனது நிறுவனத்தை கலைத்திருக்கிறார். எனினும், இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
"இப்போது ஏன் கலைக்க வேண்டும்? ஒரு விஷயமும் இல்லை - அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை, பெரிதாக தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட கட்டத்தில் வெற்றிகரமான தொழில் ஒரு சுயநலச் செயலாக மாறும் என்று ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். ஆரம்பத்தில், சில விஷயங்களை நானே நிரூபிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அநேகமாக என் வாழ்க்கையில் முதல் முறையாக, இப்போது எனக்குள் சில ஆறுதல்களைக் கண்டேன்," என்று அவர் கூறினார்.