முல்லைத்தீவு, முள்ளியவளையில் போராட்டத்தில் குதித்த மக்கள்
இலங்கை
முல்லைத்தீவு ,முள்ளியவளை, மேற்கு நாவலர் வீதியைப் புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி, நேற்று அப்பகுதி மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியை புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தியே இப் போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வீதியில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பாலமும் சீராக அமைக்கப்படாததால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 50 வருடங்களுக்கு மேலாக சீரின்றி காணப்படும் இந்த வீதி ஊடாக அவசர நிலமைகளின் போது கூட பயணிக்க முடியாத அவலம் நிலவுவதாகவும், வீதி சீரமைக்கப்படாத காரணத்தினால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
எனவே இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, வீதியை புனரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.