மட்டக்களப்பில் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 பேர் கைது
இலங்கை
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின்கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா, புதுக் குடியிருப்பு, நாவற்கூடா, கல்லடி,கிரான்குளம் உட்பட பல இடங்களில் இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள் என்பன பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்தை இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக 30 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.