• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைப்போம் – ஜனாதிபதி உறுதி

இலங்கை

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (09) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஒன்றிலிருந்து ஒன்றரை வருட காலத்திற்குள் மின்சாரத் துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்குவோம், மின் கட்டணத்தை 30 சதவீதத்துக்கும் மேல் குறைப்போம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

அத்துடன் எரிபொருள் விலையை குறைக்கவும் கால அவகாசம் தேவை. இவற்றை நாங்கள் செய்வோம்.

அதேநேரம், வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை செய்து, அவர்கள‍ை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து கொலைகளின் சகாப்தத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம், ஒவ்வொரு நபர்களின் உயிரும் பெறுமதியானவை.

கடந்த காலங்களில் நிலவிய குடும்ப அரசியல், ஊழல் அரசியல் முடிவுக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் நாட்டை சுத்தப்படுத்துவோம்.

பொதுமக்களை அநியாயமாகக் கொலை செய்த அனைவரும் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படுவார்கள், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
 

Leave a Reply