பேக்கரி வேனைத் திருடிச் சென்ற நபர் - ஜேர்மனியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்
ஜேர்மனியில், பேக்கரி வேன் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளார் ஒருவர். விடயம் என்னவென்றால், வேனுக்குள் பாண் வைக்கும் இடத்தில் வேன் சாரதி இருந்ததை அவர் கவனிக்கவில்லை!
ஜேர்மனியிலுள்ள Sinsheim என்னுமிடத்தில், பேக்கரி ஒன்றிற்கு உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்காக ஒரு வேன் சென்றுள்ளது.
அந்த வேனின் சாரதி, வேனை நிறுத்திவிட்டு, அந்த பேக்கரிக்கு கொடுக்கவேண்டிய பொருட்களை எடுப்பதற்காக, வேனின் பின்னால் பொருட்கள் வைக்கும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது ஒருவர் அந்த வேனை திருடிச் செல்லும் நோக்கில் வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர் அந்த வேனின் சாரதி வேனின் பின்னாலுள்ள பொருட்கள் வைக்கும் இடத்துக்குள் இருப்பதை கவனிக்கவில்லை.
வேனை யாரோ ஓட்டிச் செல்வதை அறிந்த சாரதி, ஓரிடத்தில் வேன் நிற்க, வேனிலிருந்து குதித்துள்ளார்.
ஆனால், அந்த நபர் மீண்டும் வேனை இயக்க, வேனிலிருந்த பாண் முதலான உணவுப்பொருட்கள் சாலையெங்கும் சிதறியுள்ளன.
தகவலறிந்த பொலிசார் வேனைத் தேடிச் செல்ல, சில தெருக்கள் தள்ளி ஓரிடத்தில் வேன் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார்கள்.
ஆனால், வேனை திருட முயன்ற ஆள் தப்பியோடிவிட்டார். அவரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையில், வேனிலிருந்த பொருட்கள் சாலையில் சிதறி வீணானதால், பேக்கரி உரிமையாளருக்கு பல ஆயிரம் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.