• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டால் மீண்டும் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கை

வாக்களிப்பு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெற்று வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையம் முற்றாக செயலிழக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை தேர்தல் பெறுபேறு வெளியிடப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு அங்கு தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பு இடம்பெற்று முடியும் வரை அந்த இடத்திலிருந்து வெளியில் வரமுடியாது. அதேபோன்று வேறு பிரதிநிதிகளுக்கு அந்த நிலையங்களுக்கு செல்லவும் முடியாது. வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் யாரும் கூடி இருக்கவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன். வாக்களிப்பு நிலையத்தில் ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் அல்லது வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நாசகார நடவடிக்கை ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையத்தை முற்றாக செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அவ்வாறு பல வாக்களிப்பு நிலையங்கள் செயலிழக்கச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் மொத்த தேர்தல் பெறுபேற்றை வெளியிடுவதற்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு மீண்டும் வாக்களிப்பு நடத்திய பின்னரே தேர்தல் பெறுபேறு வெளியிட வேண்டிவரும். அதுவரை தேர்தல் பெறுபேற்றை வெளியிட எமக்கு முடியாமல் போகும்.

அதனால் வன்முறை, நாசகார சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். கிராமங்களின் வாக்குப்பெட்டியை பாதுகாப்பது அந்த கிராம மக்களின் பொறுப்பாகும்.

அதனால் வெளிநபர்கள் கிராமங்களுக்குள் வந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் கிராம மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply