ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று நடைபெற்றது.
புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரைசெல்லும் ஆலயம் என்ற பெருமையினை ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் பாதயாத்திரை சிறப்புக்கொண்டது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இ;ப்பாத யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
வருடா வருடம் இடம்பெறும் இப் பாதயாத்திரை இவ் வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் பாதயாத்திரையினை முன்னிட்டு விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது.இந்த திருப்பலியில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து காலை 5.30மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாக சென்று வலையிறவுப் பாலம் ஊடாக பாதயாத்திரை வவுணதீவினை அடைந்து அதன் ஊடாக ஆயித்தியமலை வரைசென்றது.
விசேட சொரூபமும் இதன் போது கொண்ட செல்லப்பட்டது. கடந்த 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டனர். இலங்கைபொருட்கள்
அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலிகரும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயருமான பேரருட்தந்தை பீ.அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டு நாளை காலை 05 மணிக்கு முதல் திருபலியானது சிங்கள மொழியிலும் அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வரவேற்புடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செங்கலடியிலிருந்தும் இன்று அதிகாலை ஆயித்தியமலைநோக்கிய பாதயாத்திரை நடைபெற்றது.இந்த பாதயாத்திரையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






















