இப்ப உங்களோட சிந்தனை தீவிரமா எதுல இருக்கு?
நடிப்பின் முதல்வர், நடிகர் திலகத்திற்கு 62 வயது ஆரம்பமாகிறது. கலைத்தாயின் தப புதல்வனின் பிறந்த தினத்திற்கு அவரைப் பற்றியதொரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டால் என்ன? அப்படியானால் அந்த கட்டுரையை யார் எழுதுவது? அன்றைய நடிப்பின் நாயகனைப் பற்றி, இன்றைய நடிப்பின் நாயகனை எழுத வைத்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்தோம். நமது விருப்பத்தை கமலசகசனிடம் தெரிவித்தோம். கமலஹாசன் சொன்னார், சிவாஜி சாரைப் பற்றி அவர் ஒரு நடிப்பின் இமயம், அற்புதமான கலைஞர். இப்படியெல்லாம் ஏற்கனவே பல தடவைகள் நாம் சொல்லிவிட்டோம். இனிமேலும் அதைத்தான் சொல்லப் போகிறோம். எனவே, அந்த நடிப்புப் பல்கலைக்கழகத்தைப் பற்றி கட்டுரை எழுதுவதை விட அவரை சந்தித்து உரையாடி அந்த சுகானுபவத்தை ஒரு பேட்டியாக கொடுக்க விரும்புகிறேன். அது இன்னும் நன்றாக இருக்கும். கமலின் புதிய யோசனை மேலும் விசேஷமாக தெரிந்தது. நடிகர் திலகத்தை சந்தித்து அவரிடம் கமலின் விருப்பத்தைச் சொன்னோம்.
அடடா கமல் தாராளமாக பேட்டி காணட்டும். நல்ல இன்டலெக்சுவலான கேள்விகளை எல்லாம் கேட்பானே என்று மலர்ச்சியுடன் பச்சை கொடி காட்டினார் நடிகர் திலகம். கமலஹாசனிடம் இதுபற்றி தெரிவித்ததும் அன்று மாலை 4:30 மணி அளவில் சிவாஜியின் அண்ணன் இல்லத்திற்கு அவரே வந்துவிட்டார். வாராசா வா உன்னை பார்த்துக் ரொம்ப நாளாச்சுப்பா. சௌக்கியமா இருக்கிறாயா? வீட்ல சௌக்கியமா? என்றபடியே வரவேற்றார் நடிகர் திலகம். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்னர் கமல் சொன்னார்.
கமலஹாசன்: சிவாஜி ரசிகனாக இருந்து சினிமா நடிகனாக ஆகி நிறைய சம்பளம் வாங்குற ஆக்டர் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன். இருந்தாலும் இன்னைக்கு எனக்குள்ள இருக்கிற சந்தேகங்களைப் பத்தி உங்ககிட்ட பேசி விளக்கம் தெரிஞ்சுகிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.
நடிகர் திலகம் சிவாஜிகேணேசன்: சந்தேகங்கிறது எல்லாருக்குமே இருக்கும். என்ன கேட்க விரும்புறியோ தாராளமா கேளு. என் அனுபவத்திலிருந்து உனக்கு விளக்கம் தருகிறேன்.
கமல்: நீங்கள் நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வரும்போது நிறைய கஷ்டங்கள் இருந்திருக்கும். ஏன்னா இது வேற மீடியம், அது வேற மீடியம். நீங்கள் ஏற்கனவே நல்ல நடிகராக இருந்தாலும் சினிமா மீடியத்துக்குள்ள வந்தப்போ உங்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் என்ன?
சிவாஜி: சொல்லப்போனா, நாடக மேடையில் நடிச்சிகிட்டு இருந்தப்ப நான் நிறைய கஷ்டங்கள், குடும்பம் சஃபர் பண்ணனும்னு தெரிஞ்சுதான் சம்பாதிக்க வெளியே வந்தேன். ஆனா, அப்போ அதுமட்டும் என்னோட லட்சியம் இல்லை. தேசபக்தியும் என்னோட வளர்ந்துச்சு. கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துட்டு அந்த மாதிரி ஆகணும், அதே சமயத்தில் சம்பாதிக்கணும்ங்கிற ஆசையும் என்னோட ஆறு வயசுலேயே ஏற்பட்டது. அதனால நாடக கம்பெனியில் சேர்ந்து நிறைய சஃபர் பண்ணினேன். சினிமாவில் இல்லை.
கமல்: நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தப்போ அந்த நாடக பாணி நடிப்பின் பாதிப்பு இருந்திருக்கும். அது எப்படி தவிர்த்தீங்க?
சிவாஜி: நீ சொல்றது சரிதான். பட உலகத்துல நான் நுழைந்த உடனே என் நடிப்பைப் பார்த்தவங்க ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் மாதிரி பண்ணாதன்னு சொன்னாங்க. இப்ப கூட வேணும்னா ஸ்டேஜ் மாதிரி பண்ணுவேன்.
கமலஹாசன் கேட்கிறார்: நீங்கள் பெரிய கான்வெட்டில் படிக்கல. எல்லாமே உங்களுக்கு நாடக மேடைதான். இப்ப இந்த தலைமுறையில் எங்களுக்கு இருக்கிற படிப்பு வசதி, வாரத்துக்கு பத்து சினிமா பார்க்கிற வசதி, வீடியோ வசதிகளாம் அப்போ கிடையாது. அந்த சூழ்நிலையில் உங்க நடிப்பு திறமையை எப்படி வளர்த்துக்கிட்டீங்க? இந்த கேள்வியை உங்ககிட்ட கேட்கணும்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை. உங்ககிட்ட நேரா கேட்கிற வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சிருக்கு.
சிவாஜிகேணேசன் சொல்கிறார்: அப்பவே மத்தவங்களோட நடை, உடை, பாவனைகளை அப்சர்வ் பண்ணுவேன். ஒவ்வொருத்தரையும் ஒரு கேரக்டரா நினைப்பேன். அதோட நடிப்புல என்னோட கற்பனையையும் சேர்த்து கதாபாத்திரத்திற்கு இன்னும் மெருகூட்டுவேன். அப்புறம் அப்பவே எனக்கு நிறைய இங்கிலீஷ் படங்களை பார்த்துக் பார்த்து பழக்கமாகிப்போச்சு. அந்த சின்ன வயசுலேயே ஜேம்ஸ் கார்லேனி, ஸ்பென்சர் ட்ரேசி படம் நிறைய பார்த்தேன். நாமும் அந்த மாதிரி பண்ணனும்னு நினைச்சு என்னோட வழியில் செய்தேன்.
கமல்: ஆங்கிலத்தனமான நடிப்பை நான் உங்ககிட்ட தான் முதன்முறையாக பார்த்தேன். உங்களோட நடிப்பை வசன உச்சரிப்பை பார்த்துட்டு இவர் என்ன படிச்சிருக்காருன்னு கேட்டப்போ மூணாம் கிளாசோ நாலாம் கிளாசோ தான் தெரிஞ்சது. அப்படி இருக்கும்போது இவர் எப்படி இதைப் புரிஞ்சுகிட்டு இப்படி நடிக்கிறார்னு நினைச்சப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை யாராவது இவருக்கு சொல்லிக் கொடுக்கிறாங்களோ அப்படின்னு கூட நினைச்சேன்.
சிவாஜி: அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. நான் முன்னாடி சொன்ன மாதிரி நாம பார்க்கிறது பார்க்கிறவங்களை பொறுத்தது. சினிமா பார்க்கிறது, பத்திரிக்கை படிக்கிறது இந்த மாதிரி பொது அறிவுதான்.
கமல்: ஏன் உங்க நண்பர்கள் கூட இருக்கலாமே?
சிவாஜி: அப்படிப்பட்ட நண்பர்கள் யாரும் எனக்கு கிடையாது. நண்பர்கள் இங்கிலீஷ் நாவல்களை படிச்சிட்டு சொல்லுவாங்க அவ்வளவுதான். சின்ன வயசுலேயே இருந்து வெளிநாட்டுப் படங்களைப் பார்த்ததும் அந்த கலை உணர்வும், அதோட என் கற்பனையும் சேர்ந்ததுதான்.
கமலஹாசன்: ஆனா நடிப்பிலே நீங்க எங்களுக்கு டிக்ஷனரி மாதிரி இங்கிலீஷ்ல இருந்து தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி எங்களுக்கு புரியற மாதிரி நடிப்பை காட்டி இருக்கீங்க. அந்த மாதிரி உங்களுக்கு யாரோட நடிப்பு பாதிப்பு ஏற்பட்டது?
சிவாஜி: நான் நடிப்பை இம்ப்ரூவ் பண்ணி இருக்கேன். அதுக்கு மத்தவங்களோட கதாபாத்திர படைப்பு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது. அவங்களைப் பார்த்து நல்ல இன்ஸ்பிரேஷன் கொடுத்து நடிப்பை இம்ப்ரூவ் பண்ண சான்ஸ் கிடைச்சது. ஆனா எனக்கு யாரோட பாதிப்பும் இல்லை.
கமல்: நீங்க நடித்தது கருப்பு வெள்ளை பட காலமாக இருந்திருக்கலாம். செட்டிலே போட்ட வீடாக இருந்திருக்கலாம். ஆனா உங்களோட நடிப்பு எங்களுக்குள்ள தெரிஞ்சோ தெரியாமலோ இருக்குங்கிறதை எங்களால மறுக்க முடியாது. 1952-க்கு அப்புறம் வந்த நடிகர்களில் சிவாஜியின் பாதிப்பு இல்லைன்னு சொன்னா, அவங்களுக்கு நடிப்பைப் பத்தி ஒண்ணும் தெரியாதுன்னு அர்த்தம். இல்லைன்னா அவங்க பொய் சொல்றாங்கன்னு அர்த்தம். நடிப்பிலே நீங்க இந்த நிலைமைக்கு வந்துட்டோம்னு நீங்க உணர்ந்தது உண்டா?
சிவாஜிகேணேசன்: நீ சொல்ற மாதிரி நான் எப்பவும் ஃபீல் பண்ணினது இல்லை. இன்னும் நாம நல்லா பண்ணனும். அவரை விட நல்லா பண்ணனும்னு இருந்துகிட்டே வந்தது. நடிப்பிலே நாம ஒரு நிலைமைக்கு வந்துட்டோம்னு நான் நினைச்சதே இல்லை.
கமல்: நாம இப்ப செய்யறதை விட இன்னும் நல்லாவே செய்யலாம். அது நம்ம கையில மட்டும் இல்லை. ஏன்னா சினிமாங்கிறது ஒரு கூட்டு முயற்சி. தனியா நீங்க மட்டும் சாதிக்க முடியாது. அப்போ
சிவாஜி: அந்த கூட்டு முயற்சியே நம்ம ஏமாத்துறதும் உண்டு. இல்லையா? நம்ம ஆக்ட் பண்றோம். நம்மளோட நடிக்கிறவர் சரியா பண்ணலை. அவர் சரியா பண்ணும்போதுதான் நம்ம ஆக்ட் பண்றதும் சரியா இருக்கும். அவர் சரியா பண்ணலைன்னா நாம பண்றதும் ஓவரா தெரியும். இந்த மாதிரி பல படங்கள்.
கமல்: அந்த மாதிரி நிலைமையிலே உங்களுக்கு ஏன் டைரக்ட் பண்ணனும்ங்கிற ஆசை வரல?
சிவாஜி: டைரக்ஷனை பத்தி நிஜமாகவே எனக்கு தெரியாது. இப்போ நீ டைரக்ட் பண்ணினா உனக்கு நல்ல ஒத்துழைப்பு தருவேன். ஏன்னா, என்னைக்கும் எனக்கு டைரக்டர் ஆகணும்ங்கிற எண்ணமே வந்ததில்லை. நான் நல்ல சோல்ஜராகத்தான் இருந்திருக்கிறேனே தவிர கேப்டனாக விரும்பினதே இல்லை. ஆனா எனக்கு கேப்டனா இருந்தவங்க எல்லோருமே என்கிட்ட இன்னும் இன்னும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்களே தவிர, இது போதும்னு சொன்னதே கிடையாது.
கமலஹாசன்: நீங்கள் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?
சிவாஜிகேணேசன்: நானும் மனுஷன் தானே. சில நேரத்துல வருத்தப்படுவேன். சில நேரத்துல பேசாம இருந்துடுவேன். சில நேரத்துல பொறுத்துக்குவேன்.
கமல்: உங்களுக்கு பிடித்த டைரக்டர் யாருன்னு சொல்லுங்க?
சிவாஜிகேணேசன்: ஒவ்வொரு சப்ஜெக்ட்ல ஒவ்வொருத்தர் திறமைசாலி. அதனால இவர்தான்னு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது.
கமலஹாசன்: எல்.வி. பிரசாத் சாரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்களே?
சிவாஜி :ஆமா பிரசாத்ஜி ஒரு டிராமா ஆர்ட்டிஸ்ட். நான் ஆரம்பத்துல படத்துல நடிக்கிறப்போ ரொம்ப திரும்பாதே, ஜர்க் பண்ணாதே, முகத்தை இந்த அளவுக்குத்தான் தூக்கணும். இப்படி கேமராமுன் செய்ய வேண்டிய பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் பிரசாத்ஜி தான். நான் டிராமாவில் இருந்து சினிமாவுக்கு வந்ததாலே அவரோட அனுபவம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது. என்னை பொறுத்தவரையில் சில படங்கள் நடித்ததுக்கு அப்புறம்தான் அண்டர் ஆக்ட் பண்ண ஆரம்பிச்சேன். இவர் ஓவரா ஆக்ட் பண்றாருன்னு யாராவது சொன்னா, அது மத்தவங்க இன்ப்ளுயன்ஸ் பண்ணி சொல்ல வைக்கிறது. ஏன்னா என்னை ஓவரா ஆக்ட் பண்றாருன்னு சொன்னாதான் அவருக்கு நல்லவர்ங்கிற பேரு கிடைக்கும். இதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அவருக்கு ஆக்ட் பண்ண தெரியாமல் இருக்கலாம். இல்லை நமக்கு ஈடு கொடுக்க முடியாமலும் இருக்கலாம்.
கமல்: எனக்கு உங்களோட நடிப்பு பிடிச்சதால உங்களோட ரசிகன்னு சொல்றேன். அதே சமயத்தில் இந்த படத்துல நீங்க நடிச்சிருக்கக் கூடாதுன்னு வருத்தப்பட்டதும் உண்டு. அந்த மாதிரி சமயத்தில் நீங்க சோர்ந்ததுண்டா? ஏன்னா தோல்விங்கிறது உங்களுக்கும் வந்திருக்கும்.
சிவாஜி: நிச்சயமாக. நான் நடித்த படம் சரியா போகலைன்னா நமக்கு சான்ஸ் கிடைக்காதுங்கிற காம்ப்ளக்ஸ் எனக்கு இருந்திருக்கு. இது சாதாரண விஷயம். படம் நல்லா போகலைன்னா, அதற்கு நீ காரணம் இல்லை. கதையை சரியானபடி எடுக்கலை, கதாபாத்திரத்தை சரியா சித்தரிக்கலைன்னு பலபேர் சொல்லியிருக்காங்க. படம் எதனால் சரியா போகலைங்கிறது பின்னால என் அனுபவத்தில்தான் தெரிஞ்சுகிட்டேன். நாம எவ்வளவோ கஷ்டப்பட்டு நடிக்கிறோம். ஆனா தயாரிப்பாளர் படத்தை குறிப்பிட்ட நாளில் முடிக்காம தள்ளிப்போடுவார். இல்ல பாதியிலேயே படத்தை நிறுத்துவார். போதுமான பப்ளிசிட்டி தராதது. அதனால் படத்தை நாடு நாள் ஓடவிட்டு எடுக்கிறது. இப்படி பல காரணங்கள். கொஞ்சம் மனப்பக்குவம் ஏற்பட்டமைக்கு அப்புறம் இது என்னை பாதிக்கவில்லை.
கமல்: எனக்கு ஒரு வருத்தம். உங்களால ஆக்ஷன் படங்கள் பண்ண முடியும். உத்தமபுத்திரன் மாதிரியான படங்கள் அதுக்கு உதாரணம். ஆனா கீழ்மட்ட ரசிகர்கள் இதைத்தான் விரும்புவாங்கன்னு மத்தவங்க சொல்லித்தான் அந்த மாதிரி சூழல்ல பல படங்கள்ல நீங்க ஆக்ட் பண்ண வேண்டிய நிலைமை.
சிவாஜி: நீ என்ன சொல்ல வர்றேங்கிறது எனக்கு புரியுது. அந்த மாதிரியான நிலைமைக்கு நீங்க ஏன் வந்தீங்கன்னு கேட்கிற. அப்படித்தானே? இப்படி பண்ணினால் தான் நல்லா இருக்கும்னு சொல்லி என்னை சம்மதிக்க வச்சாங்க.
கமல்: ஆனா அதுல உங்க விருப்பம் இல்லைங்கிறது சிவாஜி பிலிம்ஸ் படங்களை பார்க்கிறப்போ தெரியுது. அந்த நேரத்துல வியட்நாம் வீடு மாதிரி படங்கள் வந்தன.
சிவாஜி: சில பேரோட இன்ப்ளுயன்ஸ் நம்ம தொழிலை பாதிக்கும் இல்லையா? அது எனக்கும் உண்டு. அது உனக்கும் உண்டு. அப்புறமா வர்றவங்களுக்கும் உண்டு. என்னைவிட சீனியர் ஆர்ட்டிஸ்டான பி.யு. சின்னப்பாவுக்கும் அது இருந்தது. இல்லாத போனா அவர் குபேர குசேலாவில் ஆக்ட் பண்ணுவாரா? குசேலனா பாபநாசம் சிவன் நடிச்சிருக்கார். அவர் காயகல்பம் சாப்பிட்டவுடன் இளமை திரும்புறது. அப்ப பி.யு. சின்னப்பா நடிச்சார். இந்த மாதிரி எத்தனையோ விதங்களில் இன்ப்ளுயன்ஸ் பாதிப்பு உண்டு.
கமல்: நீங்கள் நாடகத்துல இருந்ததுனால மேடையில கண்டிப்பா பாடியிருக்கணும் இல்லையா? ஏன் சினிமாவில் பாடல?
சிவாஜி: இப்பவும் நான் நல்லா பாடுவேனே. நானும் சினிமாவில் பாட முயற்சி பண்ணி பார்த்தேன். ரெண்டு பேரோட வேலையை கெடுக்குற மாதிரி இருந்தது. விட்டுவிட்டேன். அதுமட்டுமல்ல அப்ப பாட்டுக்கு ரெண்டு நாள் மூணு நாள் ரிஹர்சல் பார்ப்பாங்க. நமக்கு இருந்த வேலைகள்ல ரெண்டு நாள் மூணு நாள் ஒதுக்க முடியாது. முடியாதுங்கிறது ஒண்ணு தவிர, நம்ம விட பாடுறவங்க இருக்காங்கிறது என்கிறது.
கமல் :சிவாஜி பிலிம்ஸ் சார்பில் நீங்கள் நடிக்க ஹிந்தி படம் எடுத்திருக்கலாமே? சிவாஜி என்கிற சிறந்த நடிகரை இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்தின பெருமையும் கிடைத்திருக்குமே?
சிவாஜி: சிவாஜி பிலிம்ஸ் ஹிந்தி படம் தயாரித்தது. ஆனால், வேற ஹிந்தி நடிகர்கள் தான் நடிச்சாங்க. பாசமலர் படத்தை இந்தியில் எடுக்கிறப்போ நீ பண்ணுன்னு என்கிட்ட சொன்னாங்க. அது நமக்கு ஒத்து வராதுன்னு நான் சொல்லிட்டேன்.
கமல்: அப்படின்னா இந்தியில் நடிக்கிறதுக்கு உங்களுக்கு விருப்பமே இல்லையா?
சிவாஜி: விருப்பமே இல்லை. ஏன்னா நம்முடைய உருவம், பெர்பார்மன்ஸ், முகம் எல்லாமே நம்ம படத்துக்கு தான் சரியாக இருக்கும்னு நான் ஹிந்தி படத்தைப் பற்றியே நினைக்கல.
கமல்: இப்ப உங்களோட சிந்தனை தீவிரமா எதுல இருக்கு?
சிவாஜி: என்னை பத்தின சிந்தனை எனக்கு கிடையாது. பிள்ளைகள் தொழிலை நல்லா கவனிக்கணும்னு தான் விரும்புகிறேன். எனக்கு இப்போ ஓய்வு தான் தேவைப்படுகிறது.
கமல்: உங்களுக்கு ஓய்வு தேவைன்னு நினைக்கிறது நியாயம் தான். அதுக்கப்புறம் நீங்கள் தொடர்ந்து நடிக்கணும்ங்கிற என்னை போன்ற ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றுவீங்களா?
சிவாஜி: நிச்சயம் நான் நடிக்கத்தான் போறேன். என் மனசில் ஏற்பட்ட சில சங்கடங்களால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு தோணுச்சு. சமீபத்தில் என் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் வேற யாருக்கும் ஏற்பட்டிருக்காது. என் சகோதரர்களை இழந்தேன். தேர்தலில் தோற்றேன். இது அடுத்தடுத்து நடந்தது. எனக்கு மனசில் தைரியம் இருந்தது. ஆனால் ஒரு பிடிப்பு இல்லை. அதனால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் பண்ணலாம்னு விட்டுட்டேன்.
(இந்தப் பேட்டி பொம்மை இதழில் வந்தது, அப்படியே )
தொகுப்பு செந்தில் வேல் சிவராஜ் ..





















