• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரிட்டனில் கடும் வெப்ப அலைக்கு பின்னர் கொட்டும் கனமழை

பிரிட்டனில் (UK) பல வாரங்களாக நீடித்து வந்த கொளுத்தும் வெப்ப அலைக்கு பிறகு, தற்போது திடீரெனப் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்த எதிர்பாராதக் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் திடீர் வெள்ளப்பெருக்கால் (Flash Floods) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான வெப்ப அலை காரணமாகப் பிரிட்டனின் நிலப்பரப்பு மிகவும் வறண்டு கடினமாக மாறியுள்ளது. இதனால் பெய்யும் கனமழையை நிலம் உடனடியாக உறிஞ்ச முடியாமல், நீரானது நேரடியாகச் சாலைகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் தேங்கி திடீர் வெள்ளப்பெருக்கை உருவாக்கி வருகிறது என பிரிட்டன் வானிலை மையம் (Met Office) எச்சரித்துள்ளது.

அதேவேளையில், இந்தத் திடீர் மழை காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தச் சற்றே உதவினாலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழை பெய்த போதிலும் பிரிட்டனில் நிலவும் கடுமையானக் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, குழாய் மூலம் நீர் பாய்ச்சும் ‘ஹோஸ்பைப் தடை’ (Hosepipe Ban) தொடர்ந்து அமலில் இருக்கும் என நீர் விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

50 ஆண்டுகளுக்குப் பிறகு வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி நீர் நிறுவனங்கள் சுமார் 2.7 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த பயன்பாட்டுத் தடையை விதித்துள்ளன.

ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்ப பல வாரங்கள் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பதால், பொதுமக்கள் காரை கழுவுவதற்கோ அல்லது தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ ஹோஸ்பைப் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தீவிர வெப்ப அலை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் எனப் பிரிட்டன் மக்கள் இயற்கைச் சீற்றங்களால் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.

Leave a Reply