சொல்லுங்கள் மகன்களே சொல்லுங்கள்...
சினிமா
மகன்களே
என் ரத்தத்தின்
எச்சங்களே
தந்தைசொல் மிக்கதோா்
மந்திரம் இல்லையாமே
பொய்
மந்திரத்திலும்
பொய்யுண்டு
மகன்களே
இப்போது சொல்லும்
என் சொல்
மந்திரத்தினும் மிக்கது
மகன்களே
கேளுங்கள்
என்,வீட்டுக் கதவையும்
மரணம் தட்டும்
சைகை செய்யவும்
சக்தி இராதது ஆகவே மகன்களே
அப்போதைக்கிப்போதே
சொல்லிவைத்தேன்
இதை
அடிமனசில் எழதுங்கள்.
எனக்குப் பின்னால்
என் நண்பர்கள்
நான் தும்மியதெல்லாம்
சங்கீதம் என்பார்கள்.
இரண்டும் மிகையென்று
இயம்புக மகன்களே
இவன்
ரேகைகளை நம்பாதவன்
ரேகை தேயத் தேய
உழைத்தவன்
என்று சொல்லுங்கள்.
இவன்
பூக்களின் புத்திரன்
தாவர சிநேகிதன்
ஆனால்
சூரியனைச் செரித்தவன்
என்று சொல்லுங்கள்.
நாய்வேஷம் போட்டாலும் குரைத்தவனில்லை
கூவியவன் என்று
சொல்லுங்கள்.
இவன்தான்
விமா்சகா்களை மதித்தவன்
விமா்சனங்களை மதிக்காதவன்
என்று வெளிப்படுத்துங்கள்.
வெல்வெட் விரிப்பில்
நடந்தாலும்
சேறுகளையே சிந்தித்தவன் என்று
செப்புங்கள்.
ஒவ்வொரு யுத்தத்தில்
ஜெயித்தவனும்
ஆனால்
ஒருபோதும் யுத்தத்தையே
விரும்பாதவனும்
இவனே என்று எழுதுங்கள்.
உலக உருண்டையை அணைத்துக் கொண்டாலும்
இந்தியாவை மட்டும்
முத்தமிட்டவன் என்று
முன்மொழியுங்கள்.
தென்னைமரமும்
நதிக்கரையும்
தென்பட்டால்
அங்கே
சமாதியாகச்
சம்மதித்தவன் என்ற
சங்கதி சொல்லுங்கள்.
எந்த தேவதையும்
இவனை ஆசிா்வதிக்கவில்லை
கண்ணீரிலும்
ரத்தத்திலும்
கவிதைக்கு
மை?தயாரித்தவன்
என்று எழுதுங்கள்.
சோகங்களையே
சுகமாக்கிக் கொண்டதால்
வாழ்வில்
இரண்டாம் பாகத்தில்
சோகமில்லாமல்
சோகப்பட்டவன்
என்று சொல்லுங்கள்.
என் கல்லறையில்
தோற்றம் எழுதுங்கள்
13-7-1953
மறைவு...?
எழுதாதீா்கள்
இல்லையா...?
மறைவே இல்லையா ?
உண்டு
என்று....?
வானம் என்று
தீா்ந்து போகுமோ
அன்று...
பூமி என்று
தூா்ந்து போகுமோ
அன்று
காற்று என்று
மூா்ச்சையாகுமோ
அன்று
கடல் என்று தொலைந்து போகுமோ
அன்று
சூரியன் என்று
சுண்டிப் போகுமோ
அன்று
சொல்லுங்கள் மகன்களே
சொல்லுங்கள்
வானம் நிரந்தரம்
பூமி நிரந்தரம்
காற்று நிரந்தரம்
கவிதை நிரந்தரம்.
வைரமுத்து






















