பூட்டப்படாத காரில் மாட்டிக்கொண்ட கரடி பரிதாமாக உயிரிழப்பு
அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்குப் பிறகே அந்தப் பிணம் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 113 கிலோ எடையுள்ள அந்தப் கறுங்கரடி, பூட்டப்படாத காரின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளது.
கதவு தானாக மூடிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் காரை சேதப்படுத்திய நிலையில், அதிக வெப்பம் காரணமாகக் காரின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கார் கதவுகளை எப்போதும் பூட்டி வைக்கவும், வாகனங்களுக்குள் உணவுகள் மற்றும் குப்பைகளை வைக்க வேண்டாம் என்றும், ஜன்னல்களை முழுமையாக மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட கரடி நடமாட்டங்கள் குறித்துப் புகார்கள் வந்துள்ளதாக கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட இருமடங்காகும். வறட்சி காரணமாகக் காடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உணவைத் தேடி கரடிகள் மலைப் பகுதிகளிலிருந்து மக்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
மனிதர்களும் வனவிலங்குகளும் பாதுகாப்பாக இணைந்து வாழ்வது குறித்தும், கரடிகளின் பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தனது இணையதளத்தில் 'Living with Bears' என்ற சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.





















