• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்

இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்  நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக இணைந்து செயல்படுவதன் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செயல்பாடுகள், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் செயல்பாடுகளைத் தொடங்குதல் மற்றும் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. 

மேலும், நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உழைப்புப் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒருங்கிணைத்து ஒரு தேசிய மையத்தை நிறுவுவதன் மூலம், அந்த நடவடிக்கைகளின் திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரித்து எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்று இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.


 

Leave a Reply