முதல் மரியாதை!
சினிமா
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் வெளியாகி, காலத்தை வென்றுநிற்கும் தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்வது ’முதல் மரியாதை.’
நடுவயதைத் தாண்டிய பிறகும், தொப்பையை மறைக்கக் கோட்டை மாட்டிக்கொண்டு, இளம் நாயகியரோடு மரத்தைச் சுற்றி டூயட் பாடிக்கொண்டிருந்த நடிகர் திலகத்தை, 😜அவரது வயதுக்கேற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் ‘மலைச்சாமி’ பாத்திரத்தின் மூலம் புதிதாய்ப் பிறக்க வைத்தவர் பாரதிராஜா. அதற்காக அவருக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும்!🙏
முதல் மரியாதையின் மலைச்சாமி பாத்திரத்திற்காக முதலில் நடிகர் இராஜேஷின் பெயரும், பின்னர்ப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்கு சிவாஜி கணேசனே பொருத்தமானவர் என்று முதலில் நம்பியவர் பாரதிராஜாதான். பின்னாளில் படம்பெற்ற வெற்றியும், சிவாஜியின் அசாதாரணமான நடிப்பும், அந்தத் தேர்வு எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபித்தன. இராஜேஷோ, எஸ்.பி.பி.யோ மலைச்சாமியாக நடித்திருந்தால், முதல் மரியாதை இன்று நாம் கொண்டாடும் அந்தக் ”கிளாசிக்” தகுதியை அடைந்திருக்குமா என்பது ஐயமே. அந்த வகையில் சிவாஜியை மலைச்சாமியாகத் தெரிவுசெய்தமை பாரதிராஜாவின் தீர்க்கதரிசனத்துக்குச் சான்று.👍
இந்தப் படத்திற்குக் கதை எழுதியவர் பாரதிராஜாவின் பல திரைப்படங்களுக்குக் கதையமைத்த ஆர். செல்வராஜ். இந்தக் கதையை உருவாக்க அவருக்கு அகத்தூண்டலாக (Inspiration) இருந்தது இரஷ்ய நாவலாசிரியர் பியதோர் தாஸ்தயெவ்ஸ்கியின் (Fyodor Dostoevsky) வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
தாஸ்தயெவ்ஸ்கியின் ’The Gambler’ நாவலுக்குச் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றவந்த, அவரைவிட இருபத்தைந்து வயது இளையவரான அன்னா கிரிகோரியெவ்னா ஸ்னிட்கினாவுக்கும் (Anna Grigoryevna Snitkina) தாஸ்தயெவ்ஸ்கிக்கும் இடையே அன்புப் பிணைப்பு உருவானது. பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். தாஸ்தயெவ்ஸ்கி மறைந்த பிறகும் அவருடைய நினைவோடு வாழ்ந்த அன்னா, மறுமணம் செய்துகொள்ளவில்லை.
இதனை அடிப்படையாகக் கொண்டு, கிராம மக்களால் மதிக்கப்படும் பெரிய மனிதர் ஒருவருக்கும், அந்தக் கிராமத்திற்குப் பிழைப்புத் தேடி வந்து பரிசல் ஓட்டும் இளம்பெண் ஒருவருக்கும் இடையே உருவாகும் உடலைக் கடந்த அன்புறவை (Platonic relationship) கதையாய் விரித்தார் செல்வராஜ்.
கிராமத்து மண்வாசனை கமழும் காட்சிகளோடும், மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளை ஆழமாய்ப் பதிவுசெய்யும் திரைமொழியோடும் படத்தைச் சிறப்பாக இயக்கி, தாம் கைதேர்ந்த படைப்பாளி என்பதை மீண்டும் நிரூபித்தார் பாரதிராஜா.
இந்தப் படத்திற்கு இசையமைக்குமாறு இளையராஜாவிடம் பாரதிராஜா கேட்டபோது, அவருக்கு இந்தக் கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றும், படம் தியேட்டரில் ஓடுவதைவிடத் தியேட்டரைவிட்டு ஓடுவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாகக் கணித்ததாகவும் சொல்லப்படுகிறது. எனினும் மிகச்சிறந்த இசையைத் தந்து தம் பணியைக் குறைவின்றிச் செய்திருக்கிறார் இசைஞானி. மக்களோ அவரது கணிப்பைப் பொய்யாக்கி, படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிக் கொண்டாடினர்.
இன்று கேட்கும்போதும் “பூங்காற்று திரும்புமா?” பாடல் நம்மைப் பரவசத்தோடு திரும்பிப் பார்க்க வைக்கிறது. “வெட்டிவேரு வாசம்” நம்மை நகரவிடாமல் கட்டிப்போடுகிறது. “ராசாவே ஒன்ன நம்பி” நம்மைக் கிறங்கடிக்கிறது. டி.எம்.எஸ்.க்குப் பிறகு சிவாஜி கணேசனுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்த குரல் மலேசியா வாசுதேவனின் குரலே என்பதற்கு இந்தப் படத்தின் பாடல்கள் சாட்சி.
”என் இனிய தமிழ் மக்களே!” என்று கரகரத்த குரலில் தம் படங்களின் தொடக்கத்தில் பாரதிராஜா பேசத் தொடங்கியது முதல் மரியாதை படத்திலிருந்துதான்.
இன்றைய வணிகத் திரைப்படங்கள் பலவற்றில் ஊதிப்பெருக்கப்பட்ட நாயக பிம்பமும், கொடூரமான வன்முறைக்காட்சிகளும், காதைக் கிழிக்கும் இசையும், கதைப்பஞ்சமும் இருப்பதனைக் காணும்போது கதையையும் நல்ல நடிப்பையும் இசையையும் நம்பி எடுக்கப்பட்டு வெற்றிவாகை சூடிய ’முதல் மரியாதை’ இன்றும் நம் மனங்களில் முதல் மரியாதைக்கு உரியதாகவே இருக்கின்றது.
இந்தக் காவியப் படைப்பை உருவாக்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றும் தனித்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அவரது படைப்புகள் வாழும்வரை அவர் மக்களின் நினைவுகளில் வாழ்ந்துகொண்டே இருப்பார். 🙏
~மேகலா இராமமூர்த்தி






















