இந்தப் பாழும் கிழத்துக்கு உங்க முகம் தெரியாமலா இருக்கும் சாமீ...
சினிமா
கார்வார்... கர்நாடக மாநிலத்தில் தீவு போலத் தோற்றமளிக்கும் மலைப்பிரதேசம்...
"ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்ஜிஆரும் அவரது உதவியாளரும் காரில் அந்தப் பகுதியில் விரைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எம்ஜிஆர், "விஞ்ஞானத்தின் விலாசமிழந்த, நவநாகரிகத்தின் வெளிச்சம் படாத இந்த மலைப்பகுதியில் என்னை யாருக்கு அடையாளம் தெரியப்போகுது..." அப்படின்னு சொல்ல...
அதற்கு உதவியாளரோ..."உலகின் எந்தப்புள்ளிக்கு நீங்கள் சென்றாலும், உங்கள் பொன்நிறத்தைக் காணக் காத்து நிற்கும் மக்கள் கூட்டமுண்டு..." அப்படீன்னு சொல்ல, மக்கள்திலகம், "மாநிலம் கடந்து வாழும், அதிலும் இந்த மலையக மக்கள் என்னை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை" இப்படியே பேச்சு தொடர...
வழியில் ஒரு வயதானவர் தலையில் விறகுக்கட்டை சோர்வுடன் சுமந்து செல்வதைப் பார்த்துக் காரை நிறுத்தச்சொல்கிறார். உதவியாளரைப் பார்த்து, 'எங்கே போனாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுப்பாங்கன்னு சொன்னியே...இந்தப் பெரியவருக்கு என்னைத் தெரியுதான்னு பார்ப்போம்னு சொல்லி, அவரைக் காரில் ஏற்றுகிறார்.
பெரியவரிடம் பேச்சுக்கொடுக்கிறார் பொன்மனச்செம்மல். ஆனால் எம்ஜிஆரை பார்த்ததுக்கான எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் 'கேஷுவலாகப்' பேசியதைப் பார்த்த எம்ஜிஆர் தன் உதவியாளரிடம் 'நா சொன்னது போல நடந்துச்சு பார்த்தியா ' என்று சைகையிலும், பார்வையிலும் கூறுகிறார்...
ஊருக்கு கொஞ்சம் வெளியே இறங்கிய அப்பெரியவரிடம், தனது கர்ச்சீப்பில் கொஞ்சம் பணத்தைக் கொடுக்க, அப்பெரியவர் மறுக்க, பலவந்தமாக கையில் திணிக்க, அப்பெரியவர், "நீங்க கொடுத்ததை நான் வாங்கிக்கொண்டேன்.நான் உங்களுக்கு ஏதேனும் கொடுக்க நினைக்கிறேன்...என்னிடம் கொடுக்க ஏதுமில்லாததால் உங்களுக்கு குடிக்க ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துவருகிறேன்...சற்று பொறுங்க..." ன்னு சொல்லிட்டு விறுவிறுவென்று தலையில் விறகுக்கட்டுடன் நடந்து ஊருக்குள் செல்கிறார்...
அடுத்த சில நிமிடங்களில் 'கிராம மக்கள் புடை சூழ' அப்பெரியவர் காரை நோக்கிவர எம்ஜிஆருக்கும், உதவியாளருக்கும் புரியவில்லை.
காரருகே வந்த பெரியவர், "சாமீ..ஒரு நிமிஷம் வெளிய வந்து எங்க ஜனங்களுக்கு உங்க முகத்தைக் காட்டுங்க..."என சொல்ல திகைத்துப் போய் காரிலிருந்து இறங்குகுறார் எம்ஜிஆர்...
அவ்வளவு தான் கூட்டத்தில், "ஹைய்யா வாத்தியார்" என்றும், "ஹைய்யா எம்ஜிஆர்" என்றும், "நிசமாவே எம்ஜிஆர் தான்டா" என்றும் அந்த கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்...
இப்ப அந்தப் பெரியவர் பேச ஆரம்பிக்கிறார்..."இவ்வளவு நேரம் நீங்க யாருன்னு தெரிஞ்சும் ஏன் வெளிக்காட்டாம சும்மா இருந்தேன்னு நெனச்சீங்களா! இப்ப அந்த இடத்துலயே நீங்க யாருங்கிறதை தெரிஞ்சிட்டு நா மட்டும் சந்தோஷப்பட்டிருந்தேன்னா, உங்கள நா வழியில பார்த்ததாகவோ, உங்க கார்ல வந்ததாகவோ, நீங்க எனக்கு பணம் தந்ததாகவோ எங்க ஜனங்ககிட்ட சொன்னா, "போடா பைத்தியக்காரா, இதையெல்லாம் எங்கள நம்பச்சொல்றீயா! ன்னு என்னைக் கேலி பண்ணுவாங்க...அதனால தான் ஊர் ஜனங்க எல்லோரையும் கூட்டி வந்து, 'உங்களைத் தரிசிக்க வெச்சுட்டேன்..'
"எங்க ஊர்ல பால் குடிக்கிற புள்ளைக்குக்கூட உங்க முகம் தெரியறப்ப...இந்தப் பாழும் கிழத்துக்கு உங்க முகம் தெரியாமலா இருக்கும் சாமீ..." அப்படீன்னு பெரியவர் உணர்ச்சிப்பிழம்பாய்ப் பேச, அதைக் கேட்ட பொன்மனச்செம்மல் நெகிழ்ந்து உருகிப் போகிறார். அங்கிருந்து விடைபெறுகிறார்...
உதவியாளரிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.
Subramanian Muthaiya























