TamilsGuide

மெல்லிசை மன்னர் தன் இசை கற்பனைக்கு சிறகுகள் கட்டி பறக்க விட்ட பாடல்.

‘என்னைத் தெரியுமா’ என்று டி.எம்.எஸ் தனக்கே உரிய உரத்த குரலில் உச்ச ஸ்தாயி யில் சென்று பின் “நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்” என்று கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வர பியானோவும் ட்ரம்ஸ் பிரஷ்ஷிங்கும் பின்னணியில் ரிதம் சேர்க்கும். கூடவே கோரஸ் குரல்கள்.

பல்லவியின் வரிகளை இரண்டாவது முறை பாடும்போது அக்கார்டியன் மெல்ல உள்ளே நுழைந்து கொள்ளும். பல்லவியின் முடிவில் வரும் அந்த கிடார் இசை… ஆஹா…

கிடாரின் இசை அலங்காரத்தை தொடர்ந்து வயலின் மெலடியைக் குழைத்து அதைச் சரணத்துடன் அழகாக இணைக்க “நான் புதுமையானவன்…” என்று தொடங்குவார் டி.எம்.எஸ். நம்ப முடியாத இசை நீட்சி!

சரணத்தின் போது ரிதத்திற்கு பாங்கோஸ் நடுநடுவே அக்கார்டியன் சாரல்கள். பாடலில் எதிர்பாராத திருப்பங்கள் வைப்பது மெல்லிசை மன்னரின் தனிச்சிறப்பு.

“இந்த காலம் உதவி செய்ய” என்ற வரியை தபேலாவுடன் துவக்கியது அத்தகைய ஒரு இன்பமான ட்விஸ்ட்.

மீண்டும் பியானோ ரிதம் தொடங்கும் “இசையிலே மிதக்கலாம்” என்ற வரியின் போது…

இரண்டாவது நிரவலில் அக்கார்டியன் ஸவரங்களை பாட கூடவே யோட்லிங் ( yodeling) குரல்களும் கைதட்டலும் அமர்க்களப் படுத்த இப்போது வயலின் மெலடி இணைந்து பாடலை இரண்டாவது சரணத்திற்கு கொண்டு செல்லும்.

கடைசியில் ட்ரம்ஸ், ட்ரம்பெட்டுடன் வேகமான ராக் அண்ட் ரோல் இசைக்கு புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் ஆட பாடல் முடியும்.

இசைக்கருவிகள் மாறி மாறி ஜாலங்கள் புரிந்தாலும் கேட்பவர்களின் இசைப் பயணத்தை கலைக்காமல் பாடும் குரலுக்கு இனிமை சேர்க்கும் துல்லியமான இசைக்கோப்பு மெல்லிசை மன்னரின் இசை மேதைமைக்கு சான்று.

“இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்” வாலியின் வரிகள் எவ்வளவு உண்மையானவை

- ஜெயசீலன்! 

Leave a comment

Comment