TamilsGuide

எம்.ஜி.ஆருடன் இரு மனைவியர்! -நேஷனல் செல்லையா எடுத்த அரிய படம். - 

தமிழ் சினிமாவில் ‘டீச்சரம்மா’ என்ற திரைப்படம் தொடங்கி, ‘பாட்ஷா’ வரை கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் ஸ்டில் போட்டோகிராபராக பணி புரிந்தவர். 

எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லை. எடுபிடி வேலைக்கு அவர் வந்து சேர்ந்த இடம் ஏவி.எம்.ஸ்டூடியோ. இயல்பிலேயே மிக சுறுசுறுப்பானவர் செல்லையா. அப்பொழுது அறிஞர் அண்ணா ஏவி.எம்.மின் ஓர் இரவு திரைப்படத்துக்கு வசனமெழுத வந்தார். அண்ணா கேட்டுக்கொண்டபடி ஸ்டூடியோவில் அவருக்கு ஒரு குடிசை தரப்பட்டது. 300 பக்கங்கள் கொண்ட வசனத்தை அண்ணா ஓரிரவிலேயே எழுதி முடித்தார். அப்பொழுது அந்த இரவில் அண்ணாவுக்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது – காபி தயாரித்துக் கொடுப்பது, போன்ற பணிகளுக்குக்காக சுறுசுறுப்பான செல்லையாவை நியமித்தார் ஏவி.எம். செட்டியார். அண்ணாவுக்கு வேண்டிய உதவிகளை அவர் பக்கத்தில் இருந்து செய்து கொடுத்தார் செல்லையா. அடுத்த நாள் ஸ்டூடியோவை விட்டு புறப்பட்ட பொழுது அண்ணா செல்லையாவை அழைத்து, தனிப்பட்ட முறையில் விசாரித்து இருக்கின்றார். அப்பொழுது, ‘நீ இங்கேயே கடைசி வரை உதவியாளராக காலத்தை கடத்திவிடாதே, ஏதாவது சினிமா தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்.. அது உன் வாழ்க்கைக்கு உதவும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட செல்லையா, ஏவி. எம்-மில் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக இருந்த பி.கே.நடராஜனிடம் தொழில் கற்றுக் கொண்டார்.

 சிறிது நாட்களில் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்டுவிட்டார். தொடர்ந்து படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராகவும் பணிபுரிய ஆரம்பித்தார். வடபழனியில் ‘நேஷனல் ஸ்டூடியோ’ என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோவை திறந்தார். மீண்டும் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு, பக்கத்தில் இருந்த ராம் தியேட்டர் திறப்பு விழாவில் கிடைத்தது. அந்த திறப்பு விழாவுக்கும் செல்லையாதான் புகைப்படக் கலைஞர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த அண்ணாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு ‘நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை தான், ‘நெகட்டிவாக இருந்த என் வாழ்வை பாசிட்டிவாக மாற்றியிருக்கிறது’ என்று சொல்ல, அண்ணா அக மகிழ்ந்து போனாராம்.

இவர் படம் எடுக்காத அரசியல், சினிமா பிரமுகர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம். ஆனால் எம்.ஜி.ஆர் படங்களுக்கு இவர் பணிபுரியவில்லை. காரணம் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் நாகராஜராவ். 1962-ல் எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி காச நோயால் (அப்பொழுது காச நோய் என்பது உயிர்கொல்லி நோய்) உடல் நலம் குன்றியிருந்த நேரம். அப்பொழுது எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாவுடன் நெருக்கமாக இருந்த நேரம். இந்த தகவல் சதானந்தவதிக்கு தெரிய வர.. அவர் ஜானகி அம்மாவை சந்திக்க விரும்பினார். இந்த சந்திப்புக்கு எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்திருந்தார். ஜானகி அம்மாவை சதானந்தவதிக்கு மிகவும் பிடித்துப் போனது. தனக்குப் பின் எம்.ஜி.ஆரை நன்கு கவனித்துக்கொள்ளும் படி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை இருவருக்கும் நடுவில் உட்காரவைத்து செல்லையா எடுத்த படம் மிக முக்கியமானது. அவரது வாழ்வில் இந்தப்படமெடுத்த தருணத்தை மிக அற்புதமான நேரம் என்கிறார் அவர்.

VR S Selvendhiran

Leave a comment

Comment