TamilsGuide

யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரை அரங்கு திறப்புவிழா அன்று  திரையிடப்பட்ட முதல் திரைப்படம்...

யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரை அரங்கு திறப்புவிழா 24. 10. 1968  அன்று  நடந்து திரையிடப்பட்ட முதல் திரைப்படம். நானும் இந்த திரை அரங்கில் பார்த்தேன் அது ஒரு புதிய சுகமான புதிய அனுபவம் .
வின்சர் திரையரங்குஇன்றுள்ளவாறு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியுற்றிராத , டிஜிட்டல் ஊடகங்களெதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில் , சினிவா பார்ப்பதென்பது முக்கியமானதொரு பொழுதுபோக்கு. திரையரங்குகளைப் பற்றி எண்ணியதுமே முதலில் என் நினைவுக்கு வருவது யாழ் 'புது வின்சர்' திரையரங்குதான்.
'புது வின்ச'ரில் படம் பார்ப்பதென்பதே சுகமானதோர் அனுபவம்தான். அக்காலகட்டத்தில் இலங்கையிலேயே சிறந்த திரையரங்காக வின்சரே திகழ்ந்தது என்பேன். குளிரூட்டப்பட்ட வசதி இல்லையென்றாலும், வின்சரின் வடிவமைப்பு அதற்கு இயற்கையான குளிரூட்டும் வசதியை அளித்திருந்தது. விசாலமான திரையரங்கு; பெரிய ஜன்னல்கள் படம் தொடங்கும்மட்டும் திறந்திருப்பதால் காற்று ஜிலுஜிலுவென்று வீசிக்கொண்டிருக்கும்,. படம் தொடங்குவதற்குச் சிறிது நேரத்தின் முன், பணியாளர் ஒருவர் ஒவ்வொரு ஜன்னலையும் சாத்தத் தொடங்குவார். அதனைத்தொடர்ந்து திரையரங்கினுள் உள்ள ஒளியை வழங்கும் மின் குமிழ்கள் ஒவ்வொன்றாக மங்கிக்கொண்டு வர, திரைப்படம் ஆரம்பமாகும்.
திரையரங்குகளிலேயே பெரிய திரையரங்கு. நன்கு வடிவமைக்கப்பட்ட திரையரங்கு. இவற்றால் 'புது வின்சர்' ஏனைய திரையரங்குகளிலிருந்து தனித்துவத்துடன் வேறுபட்டு விளங்கியது. 'புது வின்சர்' கட்டியதும் 'பழைய வின்சர்' லிடோ என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது. அளவில் சிறிய திரையரங்கு அது.
'புது வின்ச'ரில் பார்த்த நினைவில் நிற்கும் திரைப்படங்கள்; ஆரம்ப நாளன்று திரையிடப்பட்ட இரு மலர்கள், ரகசிய போலிஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, ராஜராஜ சோழன், விளையாட்டுப்பிள்ளை, தனிப்பிறவி, நினைத்ததை முடிப்பவன் & நல்லநேரம். 'புது' வின்சரிலேயே சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் 'கோமாளிகள்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. புகழ்பெற்ற வானொலி நாடகம் அது. 'குத்துவிளக்கு' திரைப்படமும் இங்குதான் வெளியிடப்பட்டது. கட்டடக்கலைஞர் துரைராஜா தயாரித்த திரைப்படம். அக்காலகட்டத்தில் வெளிநாட்டு இறக்குமதிகள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளூர்த் தயாரிப்புகள் வெற்றிகரமாக விளங்கின. அக்காலகட்டத்தில்தான் செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' நாவல் திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அக்காலகட்டத்தில்தான் மலையக அரசியல்வாதியான வி.பி.கணேசனின் (மனோ கணேசனின் தந்தையார்) 'புதிய காற்று', 'நான் உங்கள் தோழன்' ஆகிய எம்ஜிஆர் பாணித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடின.
இன்று 'புது வின்ச'ரில் திரைப்படங்கள் ஓடவில்லை. கடடடக்கூட்டுத்தாபனப்பொருட்கள் விற்குமோரு விற்பனை நிலையமாக மாறிவிட்டது. காலத்தின் பாதிப்புகள், போர்ச்சூழலின் தாக்கங்கள் ஆகிவற்றால் பழைய நினைவுச் சின்னங்களிலொன்றாகி விட்ட 'புது வின்சர்' திரையரங்கினைப் பார்க்கையில் நெஞ்சில் இலேசானதொரு வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எம் இளமைக்காலத்துக் கனவுகளின் இருப்பிடங்களாக விளங்கிய திரையரங்குகளில் 'புது வின்ச'ருக்கு முக்கிய இடமுண்டு. நன்றி வ. ந.கிரிதரன் அவர்களுக்கு . 
 

Leave a comment

Comment