TamilsGuide

வறுமை இல்லாத உலகம் சாத்தியமா?

உலக மாந்தரில் பத்தில் ஒரு வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாக உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. சராசரியாக மூன்று டொலருக்கும் குறைவான தினசரி வருமானத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வறுமையை ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் 2019ஆம் ஆண்டு முதல் இந்த நிலை தொடர்ந்து வருவதாக அறிக்கை கூறுகிறது. வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் கிட்டிய எதிர்காலத்தில் இல்லாத நிலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறியே இருப்பதாக எச்சரிக்கிறது இந்த அறிக்கை. குறிப்பாக வறுமை அதிகமாக உள்ள நாடுகளில் சனத் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
 
உலகின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 811 மில்லியன் மக்களில் அரைவாசிப் பேர் நைஜீரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, இந்தியா, எதியோப்பியா, பாகிஸ்தான், சூடான், தன்சானியா, உகண்டா மற்றும் மொசாம்பிக் ஆகிய ஒன்பது நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் உள்ள ஏழு நாடுகள் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணுவாயுத பலத்தைக் கொண்டுள்ள போதிலும் வறுமை ஒழிப்பில் பின்தங்கி உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
 
அதேவேளை, 2030ஆம் ஆண்டில் உலகில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் 87 வீதமானோர் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள உப சகாராப் பிராந்தியத்தில் வாழ்வர் என்கிறது அறிக்கை.

உலக சனத்தொகையில் சற்றொப்ப அரைவாசிப் பேர் தற்போது வறுமையின் விளிம்பில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தினசரி வருமானம் 3.00 தொடக்கம் 8.7 டொலராக உள்ளது. இந்த நிலைமையில் வாழும் 3.7 பில்லியன் மக்கள் எந்த நேரத்திலும் வறுமைக் கோட்டிற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறது அறிக்கை. அவர்களின் வாழ்வில் ஏற்படக் கூடிய ஒரு திடீர்ச் சறுக்கல் கூட அவர்களை வறுமைக் கோட்டுக்குள் தள்ளிவிடக் கூடிய ஏதுநிலை உள்ளது.

அதேவேளை, 2000ஆம் ஆண்டு முதல் வறுமைக் கோட்டில் இருந்து விடுபட்டு பொருளாதார ரீதியில் முன்னேறிய மக்களில் பெரும்பாலானோர் இந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றனர். அதாவது, மத்தியதர வர்க்கம் என்ற வகைமைக்குள் அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயுள்ளது.

தினசரி 8.30 முதல் 28 டொலர் வரை சம்பாதிப்பவர்கள் மத்தியதர வர்க்கம் என்ற வரையறைக்குள் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இந்த வகைமைக்குள் அடங்குபவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. எனினும், இவர்களுள் பெரும்பாலானோர் வளர்ந்த நாடுகளிலேயே உள்ளனர். அத்தகைய நாடுகளில் இந்த மத்தியதர வர்க்கமே பெரும்பான்மையாக உள்ளது.
 
மறுபுறம், வளர்முக நாடுகளில் 3.00 முதல் 8.30 டொலர் வருமானம் பெறும் இடைத்தரப் பொருளாதாரத்தைக் கொண்ட மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் உலகளாவிய பன்முக வறுமைக் குறியீட்டை கடந்த மாதத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த ஆய்வின் பிரகாரம் 108 நாடுகளில் வாழும் 6.3 பில்லியன் மக்களில் 1.2 பில்லியன் பேர் கடுமையான வறுமையில் வாழுகின்றனர். இதில் 617 மில்லியன் பேர் குழந்தைகள் ஆவர். மொத்தத் தொகையில் இது 51.5 வீதமாக உள்ளது. ஒப்பீட்டு அடிப்படையில் மூன்றில் ஒரு குழந்தை வறுமையில் உள்ளது. அதேவேளை, வயது வந்தோர் மத்தியில் இந்த வீதம் ஏழில் ஒன்றாக உள்ளது.

வறுமையில் வாடுபவர்களில் 83.3 வீதமானோர் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு. வறுமையில் வாடும் 51.4 வீதமானோர் உப சகாராப் பிராந்தியத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சற்றொப்ப 616 மில்லியன் மக்கள் இந்தப் பிராந்தியத்தில் வறுமையில் வாடுகின்றனர். அவர்களுள் 57.7 வீதமானோர் சிறார்கள் ஆவர்.
 
தினசரி வருமானம் தவிர்த்து வாழ்க்கைத் தரம், போசாக்கின்மை, கல்வி, சுகாதாரம், சுத்தம், மின்சாரம், வீட்டு வசதி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றுள் ஆகக் குறைந்தது மூன்று வசதிகள் கிடைக்காதவர்கள் வறுமையில் வாழ்பவர்கள் எனத் தரம் பிரிக்கிறது இந்த ஆய்வு.  
 
உலக மக்கள் தொகையில் பத்து வீதமானோர் வறுமையில் வாடுகின்றனர் என்ற தரவை வைத்துக் கொண்டு உலகமே வறுமையில் உள்ளதாக நினைத்துவிடக் கூடாது. தற்போதைய நிலையில் உலகில் 3,428 பெரும் பணக்காரர்கள் வாழுகிறார்கள். இவர்களிடம் மாத்திரம் 20.1 ட்ரில்லியன் டொலர் சொத்துக்கள் உள்ளன. ஒட்டுமொத்த உலக நாடுகளின் வருடாந்த உள்நாட்டு மொத்த உற்பத்தியின் ஐந்தில் ஒரு மடங்கு செல்வம் இந்தப் பெரும் பணக்காரர்கள் வசம் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 4 ட்ரில்லியன் டொலரை அவர்கள் மேலதிகமாகச் சம்பாதித்து உள்ளனர். இந்த வரிசையில் உள்ள முதல் இருபது பெரும் பணக்காரர்களிடம் மாத்திரம் 2.9 ட்ரில்லியன் டொலர் செத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வறுமையை ஒழிப்பதற்காக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என உலக வங்கி முன்மொழிந்து உள்ளது. மேலோட்டமாகப்; பார்க்கும் போது இந்த ஆலோசனை வரவேற்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. ஆனால், அரசாங்கத் துறை மெலிந்து தனியார் துறை அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளும் செல்வந்தர் மேலும் சொத்துக்களைச் சேர்க்கும் வாய்ப்பாகவே அமைவதை நடைமுறையில் பார்க்க முடிகின்றது. குறைந்த வேதனத்துடன் பணியாற்ற தொழிலாளர்கள் தயாராக இருந்தாலும் அந்த வேதனத்தை மேலும் எவ்வாறு குறைப்பது என்ற கரிசனையுடனேயே முதலாளித்துவம் செயற்பட்டு வருகின்றது. அது மாத்திரமன்றி துரித இயந்திரமயமாக்கல், இயந்திர மனிதர்களின் அறிமுகம், செயற்கை நுண்ணறிவு போன்றவை மனிதர்களின் வேலைகளைத் தட்டிப் பறிப்பதையும் பார்க்க முடிகின்றது.

அரசாங்கங்கள் நினைத்தால் மனிதர்கள் மத்தியில் உள்ள வறுமையை ஒரேயடியாகப் போக்க முடியும். ஒரு சிலரிடம் தேவைக்கு அதிகமாகக் குவிந்து கிடக்கும் செல்வத்தில் ஓரளவையேனும் பெற்று வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். தொழிற்சாலைகளை, சுரங்கங்களை அரசாங்கங்கள் பொறுப்பேற்று நடத்துவதன் மூலம் சாதாரண மக்களின் நிரந்தர வருவாயை உறுதி செய்ய முடியும்.
 
ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி அவர்களை மகிழ்விக்கும் அரசாங்கங்கள் அவ்வாறு நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. அத்தகைய நிலை உருவாகாத வரை, உலக மக்கள் தொகையில் ஒரு சாரார் வறுமையில் வாழ்ந்து முடிக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

இன்றைய நிலையில் அரசாங்கங்கள் தனித்து அரசியல்வாதிகளால் மாத்திரம் இயக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. பெரும் பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், ஆயுத வியாபாரிகள் போன்றோரும் அரசாங்கத்தின் முடிவுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துபவர்களாக உள்ளனர். இந்த நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் கிட்டிய எதிர்காலத்தில் இல்லை என்பது கசப்பான யதார்த்தம்.

இயற்கையின் குழந்தைகளாகிய மனிதர்கள் எல்லாமும் பெற்றவர்களாக வாழ வேண்டும் என்பது உயரிய சிந்தனை. ஆகக் குறைந்தது அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழியற்றவர்களாக அவர்களை ஆக்கி வைத்திருப்பது யார்? சிந்தனைக்குரிய கேள்வி.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a comment

Comment