TamilsGuide

இப்படித்தான் தினமும் நடக்குதா? எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போடுங்கள்....

குமரிக்கோட்டம் படத்தை தயாரித்த கோவை செழியன் உழைக்கும் கரங்கள் படத்தையும் மக்கள் திலகத்தை வைத்துத் தயாரித்தார். இரண்டுமே வெற்றிப் படங்கள். சென்னையில் கமலா தியேட்டரில் உழைக்கும் கரங்கள் படம் பார்க்க வந்த கோபால் என்ற ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது குடும்பத்துக்கு மக்கள் திலகம் உதவி செய்தார். ..அது ஒருபக்கம் இருக்கட்டும்.

தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளின்போது தனக்கு என்ன உயர்தரமான, சுவையான சாப்பாடு வழங்கப்படுகிறதோ அதே சாப்பாடு லைட் பாய்க்கும் தரப்பட வேண்டும் என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருப்பார். உழைக்கும் கரங்கள் படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் மற்றும் அவருடன் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் தரமான சாப்பாடு. தொழிலாளர்களுக்கு சாதாரண சாப்பாடு. இது மக்கள் திலகத்துக்கு தெரியாமல் நடந்து வந்தது. ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் ஓய்வாக அமர்ந்திருந்த மக்கள் திலகத்திடம் தயங்கித் தயங்கி ஒரு தொழிலாளி இதை சொல்லிவிட்டார்.  அதைக் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம் அவரை அனுப்பிவிட்டார். 

மதியம் சாப்பாடு நேரத்தில் பரிமாறத் தயாராகும் வேளையில் தொழிலாளர் வரிசையில் மக்கள் திலகம் திடீரென அமர்ந்து விட்டார். தயாரிப்பு நிர்வாகிகள் எவ்வளவோ சொல்லியும்‘தொழிலாளர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதில்தான் மகிழ்ச்சி’ என்று கூறிவிட்டார். தயாரிப்பு நிர்வாகிகள் தயங்கியபடியே ‘இது சாதாரண சாப்பாடு. உங்களுக்கு அசைவ உணவு வகைகளுடன் சாப்பாடு தனியே உள்ளே இருக்கிறது’ .... என்று விஷயத்தைக் கூறினர். 

இதற்காகவே காத்திருந்த மக்கள் திலகம் ‘இப்படித்தான் தினமும் நடக்குதா? எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போடுங்கள். இது அநாவசிய செலவு என்று கருதினால் அந்த செலவை என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லுங்கள்’ என்று சத்தம் போட்டார்.   ‘சரி... அப்படியே உங்கள் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறோம்’ என்று சொல்ல யாருக்கு துணிச்சல் வரும்? 

மறுநாள் முதல் தொழிலாளர்கள் எல்லாருக்கும் வகை வகையான சைவ, அசைவ பதார்த்தங்களுடன் விருந்து சாப்பாடு! தன்னிடம் உண்மையை சொன்ன தொழிலாளியையும் தலைவர் காட்டிக் கொடுக்கவில்லை!

Ragkhu Gounder


 

Leave a comment

Comment