தமிழ் சினிமாவுல ஒரு நடிகருக்காகப் பாட்டு எழுதுறதுங்கிறது வேற... ஆனா, அந்த நடிகரோட உடம்புக்குள்ள புகுந்து, அவரோட மூச்சுக்காத்து எப்படி வரும், அவர் கையை எப்படி அசைப்பார், கண்ணை எப்படி உருட்டுவார்னு அத்தனையையும் மனசுல வச்சுக்கிட்டு வார்த்தைகளைக் கோர்க்கிறதுங்கிறது வேற!
அப்படி சிவாஜி கணேசனோட நடிப்புக்குத் தகுந்த மாதிரி, அவரோட கதாபாத்திரங்களோட ஆன்மாவையே பாட்டா மாத்துன ஒரு கவிஞர்தான் வாலி.
இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்த ஹிட் பாட்டுகளைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். ஆனா, அந்தப் பாட்டுகளுக்குப் பின்னாடி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கு..
1965-ஆம் வருஷம். கே. சங்கர் இயக்கத்துல சிவாஜி நடிச்ச ‘அன்புக்கரங்கள்’ படம்தான், சிவாஜிக்காக வாலி எழுதுன முதல் படம்.
அன்னைக்குப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சிருக்கு. பாடல்களைக் கேக்குறதுக்காக சிவாஜி ஸ்டுடியோவுக்கு வர்றார். அப்போ வாலி வாயில வெற்றிலைப் பாக்கு போட்டுக்கிட்டு இருந்திருக்கார்.
அதைப் பார்த்த சிவாஜிக்கு முதல்ல சின்னதா ஒரு அதிருப்தி. "என்னடா இது பாட்டு எழுதற நேரத்துலே , இவரு வெற்றிலைப் பாக்கு போட்டுக்கிட்டு இருக்காரே"ன்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கார். ஆனா, ரெக்கார்டு பண்ணியிருந்த அந்தப் பாட்டைப் போட்டுக் கேட்டதும், சிவாஜியோட மனநிலை அப்படியே மாறிடுச்சு!
அப்போ ஒலித்த பாட்டுதான்:
“ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்!”
பாட்டைக் கேட்ட சிவாஜி, "பாட்டு ரொம்ப நல்லா இருக்குய்யா! காபி சாப்பிட்டீங்களா?"ன்னு இயல்பா விசாரிச்சாரு. வாலியும் பதில் சொன்னாரு. அப்புறம் பேச்சு வாக்குல அந்த வெற்றிலைப் பாக்கு விஷயம் வந்துச்சு.
சிவாஜி வாலிகிட்ட, "ஏம்பா, இந்த வெற்றிலைப் பாக்கைப் போட்டாதான் பாட்டு வருமா?"ன்னு கேட்டாரு.
அதுக்கு வாலி கொஞ்சம் கூடத் தயங்காம, மிக நாசூக்கா, நகைச்சுவையா ஒரு பதில் சொன்னாரு:
"இல்லண்ணே... எனக்குச் சின்னதா கொஞ்சம் 'அந்தப்' பழக்கம் உண்டு. உங்கள மாதிரி பெரியவங்க முன்னாடி பேசும்போது, என் வாயில இருந்து வேற எந்த வாடையும் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் நான் எப்பவும் வெற்றிலைப் பாக்கு போட்டுக்கிட்டு இருப்பேன்!"ன்னு உண்மையைச் சொன்னாரு!
வாலி எந்தப் பாசாங்கும் இல்லாம, அதே சமயம் பெரியவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையோட, ரொம்ப நாகரிகமா சொன்ன அந்த விதம் சிவாஜிக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு! வாய்விட்டுச் சிரிச்சுட்டார் சிவாஜி. அன்னைக்குப் பிடிச்சதுதான் அந்த நட்பு, கடைசி வரைக்கும் ரொம்ப நெருக்கமா வளர்ந்துச்சு.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு சிவாஜி படங்கள்ல வாலிக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துச்சு. அவங்களோட உறவு வெறும் தொழில் ரீதியானதா இல்லாம, பரஸ்பர ரசனையும் பாராட்டும் கொண்ட உறவா மாறுச்சு.
அதுக்கு ஒரு அழகான உதாரணம் ‘பேசும் தெய்வம்’ படத்துல வர்ற ஒரு பாட்டு.
“அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ...”
இந்தப் பாட்டு சிவாஜிக்கு அவ்வளவு பிடிச்சிருந்துச்சு! ஏன் தெரியுமா? வாலி இந்தப் பாட்டுல ஒரு வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தியிருப்பார். அதாவது, இயற்கையில இருக்கிற அத்தனை அழகான விஷயங்களையும் சொல்லி, "இதெல்லாம் இவளுக்கு ஈடாகாது... இதற்கு மேல இலக்கியத்துல வார்த்தையே இல்லை!"ன்னு எழுதியிருப்பார்:
‘இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல…
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல…
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல…
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல…’
பாருங்க... இளநீரைச் சுமந்து நிற்கும் தென்னை மரமும் இல்ல, மழை மேகம் குடை பிடிக்கிற குளிர் நிலவும் இல்ல, மீன்கள் துள்ளிப் பாயுற நீரோடையும் இல்ல... இந்த உலகத்துல இருக்கிற எந்த உவமைக்குள்ளயும் அடங்காத ஒரு பேரழகுன்னு அந்தப் பெண்ணை வர்ணிச்சிருப்பார் வாலி!
இந்த வரிகளோட ஆழத்தையும், அந்த இலக்கிய நயத்தையும் சிவாஜி ரொம்பவே ரசிச்சார். எந்த அளவுக்குன்னா, அதுக்கப்புறம் வாலியை எங்க பார்த்தாலும் சாதாரணமா "வணக்கம்" சொல்ல மாட்டாராம். தூரத்துல இருந்தே "வா வாத்தியாரே..."ன்னு அன்போடு கூப்பிட்டு, வாலி எழுதுன அந்தப் பாட்டையே பாடிக் காட்டி வரவேற்பாராம்! ஒரு கவிஞனுக்கு இதைவிடப் பெரிய அங்கீகாரம் என்ன இருக்க முடியும்?
அடுத்ததா ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்துக்கு வருவோம்.
இந்தப் படத்துல வர்ற "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" பாட்டு உருவான விதமே ரொம்ப நெகிழ்ச்சியானது. முதல்ல இந்தப் பாட்டை எழுத வேண்டியது கண்ணதாசன். ஆனா, அவரோட குடும்பத்துல ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவத்தால, அவரால எழுத முடியாத சூழ்நிலை.
உடனே கண்ணதாசன் வாலிகிட்ட வந்து, "தம்பி, இந்தப் பாட்டை நீ எழுதிக் கொடுனு சொன்னாராம். இயக்குநர் ஸ்ரீதர், கடற்கரையில மூணு இளைஞர்கள் பாடுற மாதிரி காட்சின்னு சொல்ல, வாழ்க்கையில இன்னும் ஜெயிக்காத இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்குற மாதிரி அப்படி ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தாரு வாலி.
தன்னால எழுத முடியாத சூழ்நிலையில, இன்னொரு கவிஞரோட திறமையை நம்பி கண்ணதாசன் அந்த வாய்ப்பைக் கொடுத்ததும், அதை வாலி சிறப்பா செஞ்சு கொடுத்ததும் அந்தக் காலத்து ஆரோக்கியமான நட்புக்கு ஒரு சாட்சி.
‘உயர்ந்த மனிதன்’ படத்துல வர்ற "வெள்ளிக்கிண்ணம் தான் தங்கக் கைகளில்" பாட்டு எல்லாருக்கும் தெரியும்.
ஆனா, வாலி முதல்ல எழுதுன வரி "வெள்ளித் தட்டு தான் தங்கக் கைகளில்"ங்கிறதுதான்!
அதைப் பார்த்த தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வாலியைக் கூப்பிட்டாரு. "ஏம்பா, ‘வெள்ளி’ன்னா பணம்; ‘தட்டு’ன்னா தட்டுப்பாடுன்னு அர்த்தம் வந்துடுமே! ‘பணத்தட்டுப்பாடு’ன்னு அபசகுனமா இருக்கு, அதை மாத்துப்பா"ன்னு ரொம்ப நகைச்சுவையா கவலைப்பட்டாராம்.
அதுக்கப்புறம்தான் வாலி அந்த வார்த்தையை மாத்தி, "வெள்ளிக்கிண்ணம் தான் தங்கக் கைகளில்"னு கொடுத்தாரு. ஒரு வார்த்தை மாற்றம்தான்... ஆனா அதுக்குப் பின்னாடி தயாரிப்பாளரோட சென்டிமென்ட்டும், வாலியோட சொல் மாற்றும் திறனும் இருக்கு!
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...' இந்தப் பாட்டை எங்கேயாவது கேட்டாலே போதும், உடனே மனசு எங்கேயோ பழைய காலத்துக்குப் போயிடும். பல வருஷம் கழிச்சு ஒரு பழைய நண்பனைப் பார்க்கும்போது, வார்த்தைகளால பேச முடியாத பல விஷயங்களை ஒரு சின்னப் பார்வையிலயும் மௌனத்துலயும் கடத்துவோமே... அதை அப்படியே ஒரு பாட்டா வச்சிருப்பாரு வாலி.
ஆனா, இந்தப் பாட்டுக்கு பின்னாடி ஒரு செம்ம ஆச்சரியமான விஷயம் இருக்குங்க!
'உயர்ந்த மனிதன்' படத்தை எடுக்கும்போது, தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனும், இயக்குநரும் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்திருக்காங்க. அதுல ரெண்டு முதியவர்கள் கையில வாக்கிங் ஸ்டிக்கை வச்சுக்கிட்டு, ரொம்ப ஸ்டைலா நடந்துகிட்டே பழைய நினைவுகளைப் பேசிப் பாடுற மாதிரி ஒரு காட்சி வந்திருக்கு.
அதைப் பார்த்த உடனே இவங்களுக்கு ஒரு பொறி தட்டுச்சு. "நாமளும் நம்ம படத்துல சிவாஜியையும், மேஜர் சுந்தர்ராஜனையும் வச்சு இதே மாதிரி ஒரு பாட்டு எடுத்தா என்ன?"னு யோசிச்சு, நேரா எம்.எஸ்.வி கிட்டயும் வாலிகிட்டயும் சொல்லி அந்தச் சூழலை விளக்கியிருக்காங்க. ஒரு வெளிநாட்டுப் படத்தோட சின்ன ஐடியாதான், இன்னைக்கு நம்ம ஊர்ல காலத்தால் அழியாத ஒரு காவியப் பாடலா மாறியிருக்கு!
இங்கதான் ஒரு ஆச்சரியமான விஷயம் நடக்குது. இந்தப் பாட்டு ஸ்டுடியோல ரெக்கார்ட் ஆகும்போது, ஆரம்பத்துல வர அந்த மியூசிக்லேயே ஒரு ஏக்கம் இருக்கும். பல வருஷம் கழிச்சு நண்பனைப் பார்க்கிறப்போ ஏற்படுற அந்தத் தவிப்பு குரல்ல வரணும்.
சாதாரணமா மைக் முன்னாடி நின்னு பாடினா அந்த ஃபீல் வராதுன்னு நம்ம டி.எம்.எஸ். நினைச்சிருக்காரு. உடனே அவர் என்ன பண்ணார் தெரியுமா?
ரெக்கார்டிங் ஸ்டுடியோவைச் சுத்தி... நிஜமாவே வேகமா ஓடியிருக்காரு! மூச்சு வாங்க வாங்க ஓடி வந்து, அப்படியே நேரா மைக் முன்னாடி நின்னு, அந்த மூச்சுத் திணறலோடயே அந்தப் பாட்டைப் பாடி முடிச்சிருக்காரு!
இன்னைக்கு நாம அந்தப் பாட்டைக் கேட்கும்போது, ஆரம்பத்துல கேக்குமே... ஒரு மாதிரி மூச்சு வாங்குற சத்தம்... அது சும்மா வாய்விட்டுப் பாடி நடிச்ச சத்தம் இல்ல; ஒரு பாட்டுக்காக ஒரு சிங்கர் நிஜமாவே தன் உடம்பை வருத்தி, ஓடி உழைச்ச அந்த வியர்வை வாசம்!
இந்தப் பாட்டுல சிவாஜியோட நடிப்பைக் கவனிச்சிருக்கீங்களா? பெருசா கையை வீசி நடிக்கவோ, டான்ஸ் ஆடவோ மாட்டாரு. அந்த வாக்கிங் ஸ்டிக்கை ஊனிகிட்டே நடந்து வருவாரு. ஆனா, அவர் முகத்துல தெரியுமே ஒரு பார்வை... அது நடிப்பு கிடையாது.
ஒரு பாட்டு, அதுக்கு எம்.எஸ்.வி கொடுத்த தேன் போன்ற இசை, வாலியோட நெஞ்சைத் தொடும் வரிகள், அதைவிட முக்கியமா டி.எம்.எஸ்-ஸின் அந்த நிஜமான மூச்சுக்காத்து—இத்தனையும் சேர்ந்து அந்த இடத்துல ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருக்கும். அதனாலதான், இன்னைக்கும் இந்தப் பாட்டைத் தாண்டி வர்றதுக்கு தமிழ் சினிபால வேற எந்தப் பாட்டாலையும் முடியல!
வாலியோட எழுத்தை மட்டுமல்ல, அவரோட நடிப்பையும் சிவாஜி ரசிச்சிருக்கார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய ‘கையளவு மனசு’ தொலைக்காட்சித் தொடர்ல வாலி நடிச்சிருந்தார். அதுல தன் மகன் இறந்துட்டான்னு மனைவிக்குத் தெரிய வர்ற காட்சியில, வாலியும் உணர்ச்சிவசப்பட்டு அழுற மாதிரி நடிச்சிருப்பார். முதல்ல தயங்குனாலும், பாலச்சந்தர் சொன்னதுக்காக ரொம்ப இயல்பா நடிச்சிருந்தார்.
அந்தத் தொடரைப் பார்த்த சிவாஜி, உடனே வாலிக்கு போன் பண்ணியிருக்கார். வாலி போனை எடுத்ததும், "என்னய்யா நீ இப்படி நடிக்கிற? நீ அழுவதைப் பார்த்து எனக்கு அழுகை வருதுய்யா!"ன்னு மனசு திறந்து பாராட்டியிருக்கார்.
ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனோட திறமையை அடையாளம் கண்டு பாராட்டுற தருணம் அது.
சிவாஜிக்காக வாலி 60:க்கும் மேற்பட்ட படங்கள்ல பாட்டு எழுதியிருக்கார்.
ஒரு பாடலாசிரியருக்கு ஒரு நடிகர் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா? அவர் எழுதுன பாட்டை மறக்காம இருக்கிறது; சந்திக்கும்போதெல்லாம் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டுறது; அவரோட இன்னொரு திறமையைக் கண்டாலும் அதை மனசு திறந்து பாராட்டுறது. சிவாஜி வாலிக்கு இதையெல்லாம் கொடுத்தார்.
சிவாஜியைப் பற்றி வாலி பல மேடைகள்லயும், புத்தகங்கள்லயும் நெகிழ்ந்து போய் பேசிருக்காரு. அதுல ரொம்ப முக்கியமான சில விஷயங்களைப் பார்த்தா, வாலி எந்த அளவுக்கு சிவாஜியைக் கொண்டாடியிருக்காருங்கிறது புரியும்.
வாலி தன் அனுபவங்களை ஒரு புத்தகமா எழுதியிருக்காரு. அந்தப் புத்தகத்தோட பேருதான் ‘மலைக்கோட்டையும் சூரக்கோட்டையும்’.
ஏன் இந்தப் பேரு வந்துச்சு தெரியுமா? வாலி பிறந்து வளர்ந்த ஊரு திருச்சி மலைக்கோட்டை. சிவாஜி பிறந்து வளர்ந்த ஊரு தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற சூரக்கோட்டை.
அதாவது, "திருச்சி மலைக்கோட்டையில இருந்து வந்த நானும், தஞ்சை சூரக்கோட்டையில இருந்து வந்த சிவாஜி அண்ணனும் சினிமாவுல ஒண்ணா சேர்ந்து சாதிச்ச கதை இது"ங்கிறதைச் சொல்றதுக்காகத்தான், அவங்க ரெண்டு பேரோட சொந்த ஊரையும் இணைச்சு, ‘மலைக்கோட்டையும் சூரக்கோட்டையும்’னு அவ்வளவு அழகாப் பேர் வச்சாரு வாலி!
சிவாஜியோட நடிப்பைப் பார்த்து வாலி பிரமிச்சுப் போய் ஒரு கவிதை எழுதியிருப்பாரு. அந்தக் கவிதையில வர்ற வரிகளைக் கேட்டா நமக்கே மெய்சிலிர்க்கும்:
"நடிகர் திலகமே... உன்னுடைய நடிப்பைக் கண்டால்,
கேமரா லென்ஸ்களில் கூட ஈரம் கசியும்!"
யோசிச்சுப் பாருங்க... சாதாரணமா ஒரு மனிதன் நடிப்பைப் பார்த்து சக மனிதர்கள் அழுவாங்க. ஆனா, உயிரே இல்லாத, வெறும் கண்ணாடியால் ஆன அந்த கேமரா லென்ஸ் கூட உன் நடிப்பைப் பார்த்து அழுதுடும்னு எழுதியிருக்காரு வாலி! ஒரு நடிகனுக்கு இதைவிடப் பெரிய பாராட்டை இந்த உலகத்துல வேற யாராலயும் கொடுத்துட முடியாது.
வாலி ஒரு மேடையில ரொம்ப எதார்த்தமா ஒரு விஷயத்தைச் சொன்னாரு:
"நான் எத்தனையோ படங்கள்ல எவ்வளவோ பெரிய வரிகளை எழுதியிருக்கலாம். ஆனா, நான் எழுதுன அந்தச் சாதாரண வரிகளுக்குத் தன்னோட நடிப்பால உயிர் கொடுத்தவர் சிவாஜி அண்ணன்தான்! நான் வெறும் எழுத்தைத்தான் கொடுத்தேன்; ஆனா, அந்த எழுத்துக்குள்ள உயிரை ஊதி, அதைக் காவியமா மாத்துனது சிவாஜியோட முகபாவனைகள்தான்"னு ரொம்ப அடக்கமா சொல்லியிருக்காரு.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, சிவாஜி அவர் சினிமாவுல நடிக்கிறதைக் குறைச்சுக்கிட்ட காலத்துல கூட, வாலிக்கு சிவாஜி மேல இருந்த அந்தப் பாசம் குறையவே இல்ல.
சிவாஜி நடிச்ச கடைசி கால மனௌனவரு சின்னவரு படத்துக்கும் வாலிதான் பாட்டு எழுதுனாரு. அப்போ வாலி என்ன சொன்னார் தெரியுமா?
"சிவாஜி அண்ணனோட ஆரம்ப காலத்துல இருந்து, அவரோட கடைசி கால படம் வரைக்கும் பாட்டு எழுதுற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு. இது என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய வரம்!"னு சொல்லி நெகிழ்ந்து போயிருக்காரு.
மலைக்கோட்டையும் சூரக்கோட்டையும் ஒண்ணா இணைஞ்சு, தமிழ் சினிமாவுல நிகழ்த்திய அந்த மாயாஜாலம் இன்றைக்கும் நம்ம காதுகள்லயும், கண்ணுலயும் நிக்குது!
Senthilvel S


