பெரும்பாலான சிவாஜி கணேசனின் படங்களுக்கு டி.எம். சௌந்தராஜன் தான் பாடியிருப்பார். சிவாஜி கணேசன் படம் என்றாலே டி.எம்.எஸ் குரல்தான் என்று மாறிபோனதற்கு பின்னால் இருக்கும் சுவாரசிய கதை ஒன்று உள்ளது..
1954ம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, லலிதா, ராகினி, டி.எஸ். பாலைய்யா, பி.பி ரங்காச்சாரி மற்றும் பலரது நடிப்பில் உருவான திரைப்படம் 'தூக்குத் தூக்கி'.
படம் உருவாகும் போதே படத்தில் 8 பாடல்கள் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர், அந்த பாடலை திருச்சி லோகநாதன்தான் பாடுவது என்று முடிவு செய்யப்பட்டு தயாரிப்பு நிறுவனம் அவரை அணுகி படத்தில் இந்த 8 பாடலையும் நீங்களே பாடிவிடுங்கள் ரூ. 2000 சம்பளம் என்று கூறியிருக்கின்றனர்.
திருச்சி லோகநாதன் அந்த சமயத்தில் ஒரு பாடலுக்கு ரூ. 5000 சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்ததால், 8 பாடலுக்கு ரூ.8000 சம்பளமாக கொடுத்தால் பாடுவேன் என்று கூற தயாரிப்பு நிறுவனம் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் வாய்ப்பை நிராகரித்துள்ளார். மேலும், மதுரையில் டி.எம். சௌந்தராஜன் என்று புது பாடகர் இருக்கிறார் அவரிடம் வேண்டுமானால் கேட்டு பாருங்கள் என்று திருச்சி லோகநாதன் கூறியுள்ளார்.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் மதுரையில் டி.எம். சௌந்தராஜனை தேடிப்பிடித்து அவரிடம், 'சிவாஜி கணேசன் படம் ஒன்றுக்கு நீங்கள் பாடவேண்டும் மொத்தம் 8 பாடல்கள் சம்பளம் ரூ. 2000' என்று கூறியுள்ளனர். அதுவரை சிறுசிறு வேலைகள் செய்து ரூ.2, 50ரூ, 80ரூ என்று சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த டி.எம். சௌந்தராஜனுக்கு இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது, உடனே சரி என்று சொல்லிவிட்டார்.
ஆனால் அவரின் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை, 'தூக்குத் தூக்கி' படத்தின் நாயகன் சிவாஜி கணேசன், 'பராசக்தி' படத்தில் தனக்கு பாடிய சி.எஸ். ஜெயராமன் தான் பாட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதே போல படத்தின் இசையமைப்பாளர் 'நம் படத்தில் வரும் நாட்டுப்புற பாடலுக்கு அவருடைய குரல்தான் பொருத்தமாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த டி.எம்.எஸ் 'சார் நான் பாடுகிறேன், ரெகார்ட் செஞ்சு கேட்டு பாருங்க, பிடித்திருந்தால் பாடவைங்க இல்லையென்றால் விட்டுவிடுங்கள்' என்று கூறியுள்ளார்.
இடையே படத்தின் 3 பாடல்களை டி.எம். சௌந்தராஜனுக்கு பாட கொடுத்துள்ளனர், அவரின் குரலை கேட்டு சிவாஜிக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதாம், அவரே பாடட்டும் என்று ஒப்புக்கொண்டாராம். அதன் பின், படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களிலும் அவரே பாடி முதன் முறையாக ரூ. 2000 சம்பளத்தை வாங்கினாராம்.
-பிரசாந்த் !


