TamilsGuide

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திரத்தில் இன்று (17) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் தற்போது இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்புக்கு அமைவாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தீவுகள்ஆராயுங்கள்

இந்த அறிவிப்பானது அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்டது என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

இதன் அதிர்வுகள் அவுஸ்திரேலியா வரை உணரப்பட்டன.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி அளவில், இந்தோனேசியாவின் மலுக்கு மாகாணத்தில், மேற்கு பப்புவாவுக்கு அருகில் உள்ள பண்டா கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாண்டா கடலுக்கு அடியில் 29 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவுஸ்திரேலிய புவி அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று தற்போதைய கணிப்புகள் தெரிவிப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தோனேசியாவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​டார்வின் நேரப்படி காலை சுமார் 6.41 மணிக்கு, நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் அந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தோனேசியா, புவியின் நில அதிர்வு மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான, ‘பசிபிக் நெருப்பு வளையத்தில்’ (Pacific Ring of Fire) அமைந்துள்ளது.

இந்தப் பகுதிக்கு அடியில் நகரும் புவித்தட்டுகள் (tectonic plates), அவ்வப்போது வலிமையான நிலநடுக்கங்களையும் கடுமையான எரிமலை வெடிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
 

Leave a comment

Comment