திருகோணமலையில் பரபரப்பு - திடீரெனப் பூமிக்குள் தாழிறங்கிய வீடு
இலங்கை
திருகோணமலை – மிகிந்தபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் கிணறும், அதனை அண்டிய வீட்டின் பகுதிகளும் திடீரெனத் தாழிறங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்த கிணறு தாழிறங்கியுள்ள நிலையில், கிணற்றின் மேற்பகுதியிலுள்ள கட்டமைப்பு மாத்திரமே தற்போது மேலே தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வீட்டின் ஏனைய பகுதிகளும் தொடர்ந்து தாழிறங்கி வருவதால், அங்கு வசிக்கும் குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதி தாழிறங்கி வருவதாகவும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ள போதிலும், இதுவரை எவரும் நேரில் வந்து நிலைமையைப் பார்வையிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.





















