எப்படி உங்கள் இழப்பை ஈடுகட்ட முடியும் தேவா சார்..!- ஒய்.ஜி.மகேந்திரன் இரங்கல்...
சினிமா
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தேவாவின் மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எப்படி உங்கள் இழப்பை ஈடுகட்ட முடியும் தேவா சார், இப்படி ஒரு அற்புதமான மனிதரை நாம் எப்படி மறக்க முடியும். உங்கள் இசை சாதாரண மனிதனின் ஆத்மாவில் நுழைந்தது. உங்கள் கானா ஸ்டைல் சாமானியனின் மகிழ்ச்சி. உங்களைச் சுற்றி இசைத் துறையில் ஜாம்பவான்கள் இருந்தபோதும் நீங்கள் ஆட்சி செய்தீர்கள்.
உங்கள் பணிவில் நீங்கள் இன்னொரு எம்.எஸ்.வி. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சாருகேசி மூலம் கிளாசிக்கல் பாணியில் அழியாத இசையைக் கொடுத்தீர்கள். உண்மையில் திரையில் என்னை நீங்கள் சாருகேசி ஆக்கினீர்கள்.
உங்கள் சிரிப்பும் உங்கள் தனித்துவமான நகைச்சுவை உணர்வும் மிகவும் தொற்றக்கூடியது. 70-களில் நமது UAA நாடக நாட்களில் இருந்து நமது ஆர்கெஸ்ட்ராவின் ஒரு பகுதியாக உங்களை பார்த்ததிலிருந்து நீங்கள் எனக்கு ஒரு சகோதரர் போல இருந்தீர்கள்.
திரையுலகம் ஒரு சிறந்த இசையமைப்பாளரையும், அதைவிடச் சிறந்த மனிதரையும் இழந்துவிட்டது... டிசம்பர் 13 அன்று திரு கே.பாலசந்தர் பெயரில் சிறப்பு விருதுடன் உங்களை கௌரவிக்க பாரத் கலாச்சார் திட்டமிட்டிருந்தது. கொடூரமான விதி அந்த கௌரவத்தை எங்களுக்குத் தரவில்லை.
நீங்கள் விட்டுச் சென்றவர்களின் இதயங்களில் என்றென்றும்நீங்கள் வாழ்வீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






















