புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து - 12 பேர் காயம்
இலங்கை
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று நேற்றிரவு (16) புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட மீ ஓயா பாலத்திற்கு அருகில் பாதையிலிருந்து விலகி, சுமார் 20 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 12 பேர் காயமடைந்து, புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஏழு பெண்களும், சிறுமி ஒருவரும், நான்கு ஆண்களும் அடங்குவர்.
மழைக்காலச் சூழலால் பேருந்தின் சாரதி வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























