சீனா - வடகொரியா இடையே புதிய பாலம் திறந்து வைப்பு
சீனா மற்றும் வடகொரியா இடையே புதிய எல்லைப் பாலம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது பல தசாப்தங்கள் பழமையான சீன – கொரிய நட்புப் பாலத்துக்கு மாற்றாக இந்தப் புதிய பாலம் அமைகிறது.
சீனாவின் எல்லை நகரமான டாண்டொங் மற்றும் வடகொரியாவின் சிணுஜு நகரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், சுமார் 3 கிலோமீற்றர் நீளத்தில் இந்தப் புதிய யாலு ஆற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்திருந்தன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் வடகொரியா தனது வீதி மற்றும் சுங்கக் கட்டமைப்புப் பணிகளை நிறுத்திவைத்தமை உள்ளிட்ட காரணங்களால், அதன் திறப்பு விழா காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை மேலும் துரிதப்படுத்தும் எனச் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள் காரணமாகக் கடுமையான சர்வதேசத் தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனாவுடன் புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















