எட்மண்டனில் கோர விபத்து ஓருவர் பலி
கனடா
கனடாவின் எட்மண்டன் நகரில் சட்டவிரோத கார் பந்தயத்தால் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 மாதக் குழந்தை உட்பட நால்வர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:55 மணியளவில் 97 தெரு மற்றும் 118 அவென்யூ பகுதியில் இவ்வதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யமஹா YZFR6 மோட்டார் சைக்கிளும், பிஎம்டபிள்யூ (BMW) காரும் 97 தெரு வழியாக வடதிசையில் அதிவேகமாகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சென்றுள்ளன.
அப்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயது இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் கிழக்கு ஓரத்திலிருந்த நடைபாதை மேட்டில் ஏறி, 120 அவென்யூ அருகே பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் பேருந்து நிழற்குடையில் நின்றுகொண்டிருந்த 21 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 46 வயது ஆணும், 18 வயதுப் பெண்ணும் பலத்த காயமடைந்தனர்; அந்தப் பெண்ணின் 10 மாதக் கைக்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தொடர்புடைய பிஎம்டபிள்யூ காரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான ஏதேனும் தகவல்களோ அல்லது விபத்துக் காட்சிப் பதிவுகளோ (Videos) வைத்துள்ள பொதுமக்கள், எட்மண்டன் காவல் துறையை 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது கிரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






















