• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை

இலங்கை

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை, எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து பேர் சாட்சியமளித்துள்ளனர்.

2009 மார்ச் 31ஆம் திகதி முதல் 2015 மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், யோஷித ராஜபக்ச கடற்படைக்குச் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு விபர அறிக்கைகள் தொடர்பிலும் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யோஷித ராஜபக்சவுக்கு கடற்படையினால் வழங்கப்பட்ட வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணங்கள் குறித்தும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 2016 டிசம்பர் மாதத்தில் அவருக்கு அடிப்படை வேதனமாக 16,500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அதிலிருந்து 110 ரூபாய் கழிக்கப்பட்டதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

குறித்த தொகை அடிப்படை வேதனத்தைக் குறிக்கின்றதே தவிர, ஏனைய கொடுப்பனவுகள் அதில் உள்ளடங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிகளில் பங்கேற்றபோது வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பிலும் நீதிமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அமெரிக்க டொலர்களில் பணம் வழங்கப்பட்டதாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2006ஆம் ஆண்டு முதல் 2016 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில், யோஷித ராஜபக்சவுக்கு வேதனம் மற்றும் அடிப்படைக் கொடுப்பனவுகளாக மொத்தம் 5,150,626 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மற்றுமொரு கடற்படை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பில் பிரதி மன்றாடியார் நாயகம் ஒஸ்வல்ட் லக்ஷ்மன் பெரேரா சாட்சியங்களை நெறிப்படுத்தியதுடன், பிரதிவாதி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.
 

Leave a Reply