• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்

சவுதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக விதேசம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

சமூக ஊடகக் கருத்துத் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஆரம்பத்தில் அனோஜன் சிவராசாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையிலேயே, கடந்த அக்டோபர் 13 ஆம் திகதி சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான தீவிர முன்னெடுப்புகளின் பிரதிபலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. தீவுகள்ஆராயுங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் நேரடி வழிகாட்டலின் கீழ் இராஜதந்திர மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் அனோஜனின் குடும்பத்தினரும் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்துப் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த வழக்கினை வெற்றிகரமாக நடத்துவதற்காகத் தேவையான அனைத்து சட்டச் செலவுகளையும் இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க தீர்மானித்திருந்ததுடன், குடும்பத்தினர் ஏற்கனவே செலவிட்டிருந்த சட்டக் கட்டணங்களையும் மீள வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் சவுதி அரேபிய சட்டத்தரணிகளுடன் இணைந்து உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவுதி அரேபிய அரசாங்கத்திற்கும், அந்நாட்டின் நீதித்துறை மற்றும் சட்ட நடைமுறைகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சவுதிக்கான இலங்கைத் தூதுவர், தூதரக அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், சட்டக் குழுவினர் மற்றும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் தெரிவித்தார். தீவுகள்ஆராயுங்கள்
 

Leave a Reply