உலகின் ஐந்தாவது மிகப் பெரிய நாடும், தென் அமெரிக்காவில் மிகப் பெரிய நாடுமான பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிராத நிலையில் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரேசில் நாட்டையும் தாண்டி உலகின் பல நாடுகளின் சிறப்புக் கவனத்தை இந்தத் தேர்தல் ஈர்த்திருந்தது. நடப்பு ஜனாதிபதியான லூலா டா சில்வா ஒரு இடதுசாரி. அவரை எதிர்த்துக் களம் கண்ட மேனாள் ஜனாதிபதி யாயர் பொல்சனாரோவின் மூத்த மகனும், செனட் சபை உறுப்பினருமான பிளாவியோ பொல்சனாரோ தீவிர வலதுசாரி. முன்னணி வேட்பாளர்களாக இவர்கள் இருவரும் களம் கண்ட தேர்தல் என்பது ஒரு தத்துவார்த்துப் போட்டியாகக் கருதப்பட்டது. ஆனால், அதனிலும் மேலாக பொல்சனாரோவை வெற்றிபெறச் செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கா மேற்கொண்ட பகிரங்க மற்றும் மறைமுக நகர்வுகள் இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்திருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே தென்னமெரிக்காவை தனது கொல்லைப்புறமாகக் கருதிச் செயற்பட்டுவரும் அமெரிக்கா, அந்தப் பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து வந்தமை பகிரங்கமான உண்மை. ‘மொன்ரோ கோட்பாடு’ என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய அமெரிக்கா பல சர்வாதிகாரிகளையும் பதவியில் அமர்த்தி தனது நலன்களைக் காத்து வந்தது. அமெரிக்காவின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராகக் களம் கண்ட இடதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சிக்கு வந்தனர். எனினும், இதனைச் சகித்துக் கொள்ளாத அமெரிக்கா மீண்டும் மீண்டும் தனது நடவடிக்கைகளை வெவ்வேறு வழிகளில் மேற்கொண்டு வந்தது.
தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆட்சியில் ‘டொன்ரோ கோட்பாடு’ என்ற ஒரு பதம் மொன்ரோ கோட்பாடு என்பதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’ என்பதற்கு ஒப்ப முன்னைய அதே வெளியுறவுக் கொள்கையை மேற்குப் பிராந்தியம் முழுமைக்கும் அமுல்படுத்துவதே இதன் இலக்கு. தனது புதிய கொள்கைக்கு அமைவாக அமெரிக்கக் கண்டத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கங்களை அகற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியில் அது வெற்றியும் கண்டு வருகிறது.
அண்மைக் காலத்தில் மாத்திரம் தென்னமெரிக்கப் பிராந்தியத்தின் ஏழு நாடுகளில் இடதுசாரி அரசாங்கங்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. வெனிசுவேலாவின் அதிபர் நிக்கலஸ் மதுரோ, அமெரிக்கப் படையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாகக் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளார். கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் இறுக்கமாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாடு வரலாறு காணாத எரிபொருள் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ‘போதைப் பொருள் ஒழிப்பு’ என்ற போர்வையில் கடல் பிராந்தியங்களிலும், நிலப் பகுதிகளிலும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. அது தவிர, வர்த்தக நடவடிக்கை என்ற பெயரில் பல மடங்கு உயர்வான வரிகளையும் அமெரிக்கா குறிப்பிட்ட நாடுகள் மீது விதித்து வருகின்றது.
பிரேசில் தேர்தலில் போட்டியிடும் பொல்சனாரோ மீதான அமெரிக்காவின் பாசம் வெளிப்படையானது. அரசாங்கத்துக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள மேனாள் ஜனாதிபதி யாயார் பொல்சனாரோ விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ட்ரம்ப் அதற்காக பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மாத்திரமன்றி, தேர்தலில் போட்டியிடும் அவரது மகனான செனட்டர் பிளாவியா பொல்சனாரோவையும் வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து நேரில் சந்தித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை தடுத்துவிடும் எண்ணத்தில் உள்ள அமெரிக்க நிர்வாகத்திற்கு, ரஸ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயற்படும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில் இணைந்து செயற்படுவதும் உவப்பான விடயமாக இல்லை. இந்நிலையில் லூலா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும், அவரின் இடத்தில் மேற்குலக விழுமியங்களைப் பின்பற்றும், தனது சொல் கேட்டு நடக்கும் ஒருவரை பதவியில் அமர்த்த வேண்டும் என அமெரிக்கா துடியாய்த் துடிக்கிறது.
21 கோடியே 42 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பிரேசில் நாட்டில் ஜனாதிபதி, காங்கிரஸ் மற்றும் செனட் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி நடைபெற்றன. ஜனாதிபதிப் பதவிக்காக 12 பேர் போட்டியிட்டு இருந்தனர். பதிவு செய்யப்பட்ட 15 கோடியே 85 இலட்சம் வாக்காளர்களில் 12 கோடியே 52 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். தேர்தல்களில் வாக்களிப்பது குடிமக்களின் கடமை என்ற சட்டம் அமுலில் உள்ள பிரேசிலில் 78.92 விழுக்காடு மக்கள் இம்முறை வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
முதல் சுற்றில் தற்போதைய ஜனாதிபதி லூலா முன்னிலை வகிப்பார் என தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் கூறிய போதிலும் தேர்தல் முடிவுகள் மாறாகவே இருந்தன. பிளாவியா பொல்சனாரோ 47.03 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தையும், லூலா 45.16 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். இவர்கள் இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் மோத உள்ளனர்.
முதலிரண்டு இடங்களையும் பெற்ற வேட்பாளர்களுக்கு இடையே வெறுமனே 22 இலட்சம் வாக்கு வித்தியாசமே உள்ள நிலையில் இரண்டாவது சுற்று மிகவும் இறுக்கமாகவே அமையும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, இடதுசாரி அரசியல் பாதையில் இருந்து விலகி வலதுசாரி அரசியல் பாதையை நோக்கி பிரேசில் செல்லுமா என்ற கேள்வியும் எழுகிறது. உழைக்கும் மக்களும், விளிம்புநிலை மக்களும் இடதுசாரி சார்பு நிலைப்பாடு கொண்டவர்கள், போர்க் குணம் மிக்கவர்கள். அவர்கள் மிக இலகுவில் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
மறுபுறம், தங்கள் வர்க்க நலன்களைக் காப்பாற்றிக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண்ட வலதுசாரிகள் தம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும் பாவித்து இடதுசாரிகளைத் தோற்கடிக்கவே முயல்வார்கள்.
இந்நிலையில், இரண்டாவது சுற்றுத் தேர்தல் வழக்கத்துக்கு மாறான ஒன்றாகவே அமையும் என ஊகிக்கலாம். பொல்சனாரோவை வெல்லச் செய்யும் நோக்கம் கொண்ட ட்ரம்ப் தனது பங்குக்கும் ஏதாவது தில்லு முல்லுகளை மேற்கொள்ளக் கூடும்.
இவற்றையெல்லாம் தாண்டி வெற்றிக் கனியைப் பறிப்பது லூலாவைப் பொறுத்தவரை கடினமாகவே இருக்கும் என்பதே யதார்த்தம்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் 24.6 விழுக்காடு மக்கள் ஒன்றில் தேர்தலைப் பகிஸ்கரித்து இருக்கிறார்கள் அல்லது தங்கள் வாக்குகளை வெற்று வாக்குகளாகப் பதிவு செய்திருக்கிறார்கள் அல்லது அவற்றை திட்டமிட்டு வலுவிழக்கச் செய்து உள்ளார்கள். தேர்தல்கள் மீதான தங்களின் வெறுப்பை அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என எடுத்துக் கொண்டால், தீர்க்கமான இரண்டாவது சுற்று வாக்களிப்பில் அவர்கள் கலந்து கொள்வார்களா? அல்லது வேட்பாளர்களில் ஒருவரால் அவர்களில் கணிசமானவர்களை வாக்களிப்பு தினத்தன்று வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துவர முடியுமா?
முதலாவது சுற்றில் முதலிரண்டு வேட்பாளர்கள் தவிர்த்து ஏனைய வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்கிய 7.81 விழுக்காடு வாக்காளர்கள் இரண்டாவது சுற்றில் யாருக்கு வாக்களிப்பார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளே இரண்டாவது சுற்றில் வெற்றிபெறப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும். அதற்கான விடையைத் தெரிந்துகொள்ள எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.
சுவிசிலிருந்து சண் தவராஜா


