தமிழ் சினிமாவில் சில நடிகர்களை பார்த்தவுடன், “இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே!” என்று நமக்குத் தோன்றும். பெரிய கதாபாத்திரம் இல்லையென்றாலும், தங்களுக்குக் கிடைக்கும் சில காட்சிகளிலேயே அந்த நடிகர்கள் மனதில் பதிந்துவிடுவார்கள். அந்த வகையில் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம் தான் நமோ நாராயணன்.
ஆனால், அவர் சினிமாவுக்கு வந்த பாதை ஒரு வழக்கமான நடிகரின் பாதை கிடையாது.
மதுரையைச் சேர்ந்த நமோ நாராயணன், பெற்றோர் இருவரும் போஸ்ட் மாஸ்டர்களாக பணியாற்றிய குடும்பத்தில் மூத்த மகனாக வளர்ந்தவர். Software Engineering படித்த அவர், நடிப்பைத் தேர்வு செய்வதற்கு முன்பு வெளிநாடுகளில் வேலை பார்த்திருக்கிறார். பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் Software Engineer-ஆக பணியாற்றியதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
பின்னர் சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத திருப்பமாக சினிமா வாய்ப்பு கிடைத்தது.
சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தது அவரது வாழ்க்கையையே மாற்றியது. படத்தில் எதற்கெடுத்தாலும் ப்ளக்ஸ் பேனர் வைத்து விளம்பரம் செய்யும் ஆர்வம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாபாத்திரம் பெரியதாக இல்லாவிட்டாலும், அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதன்பிறகு வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. ஈசன், நிமிர்ந்து நில், குட்டிப்புலி, யாமிருக்க பயமே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கொம்பன், ரஜினிமுருகன், அப்பா, ஆண்டவன் கட்டளை, கொடி, விசுவாசம் என பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் என எந்த வேடம் கிடைத்தாலும், அதற்கேற்ற உடல்மொழியுடன் நடிப்பது அவரது தனித்தன்மையாக மாறியது.
அவரது திரைப்பயணத்தில் ‘கொம்பன்’ முக்கியமான படமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘Thappana’ படத்தில் நடித்த அனுபவமும் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாம். முதல் காட்சிகளில் பதற்றமாக இருந்தபோது மம்முட்டி தன்னிடம் இயல்பாகப் பேசி அந்த பதற்றத்தை குறைத்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அவரது பெயருக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ‘நமோ நாராயணன்’ என்பது சினிமாவுக்காக வைத்த பெயர் அல்ல; அவரது தாத்தாவின் பெயராம்! ஆரம்பத்தில் அவர் நடிப்பதை குடும்பத்தினர் விரும்பவில்லை என்றாலும், பின்னர் அவரது பயணத்தை ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் வெளிநாட்டில் Software Engineer… இன்று தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களின் மூலம் நம்மை சந்திக்கும் நடிகர்!


