அணு ஆயுத அச்சுறுத்தல், AI-ன் தீய பயன்பாடு - மனிதகுல அழிவிற்கு நாள் குறித்த ஆய்வாளர்கள்
Malicious use of AI threaten end of humanity by 2100: செயற்கை நுண்ணறிவின் தீய பயன்பாடு 2100-ஆம் ஆண்டிற்குள் மனிதகுலத்தின் அழிவுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
செயற்கை நுண்ணறிவின் (AI) தீய பயன்பாடு அல்லது அணு ஆயுத மோதல் காரணமாக, 2100-ஆம் ஆண்டிற்குள் மனித இனம் அழிந்துபோகக்கூடும் என்று உலகளாவிய இடர் மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.
அடுத்த 75 ஆண்டுகளில் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களின் பட்டியலில் அந்த இரு காரணிகளும் முதலிடத்தில் உள்ளதாகவும்; இந்தப் பட்டியலில் பணக்கார நாடுகள் வழங்கும் உதவித் தொகைக் குறைப்புகள், பருவநிலை நெருக்கடி மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த தி லான்செட் ஆணையத்தின் பின்னணியில் உள்ள நிபுணர்கள், அனைத்து அச்சுறுத்தல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், அதாவது அவற்றை ஒன்றாகவே கையாள வேண்டும் என்றும் கூறினர்.
ஆனால், ஒவ்வொன்றின் மீதும் செயல்படுவதற்கு ஒரு யதார்த்தமான வழி உள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உயிரியல் ஆயுதங்கள் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவின் தீங்கிழைக்கும் பயன்பாடு மற்றும் அணு ஆயுதப் பஞ்சத்தை ஏற்படுத்தும் அணு மோதல்கள் ஆகியவை அடுத்த 75 ஆண்டுகளில் மனித இனம் அழிந்துபோகும் அபாயங்களைக் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறியது.
மேலும், அவற்றின் நிகழ்தகவு குறைவாக இருந்தாலும், அணு ஆயுத மோதலின் போது சூரிய ஒளியைத் தடுத்து பஞ்சத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போதுமான துகள்களை மேல் வளிமண்டலத்தில் செலுத்துவதன் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதங்கள் மூலமாகவோ அவை மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையுடன் இணைந்து வெளியிடப்பட்ட லான்செட் (Lancet) தலையங்கம் ஒன்று விடுத்துள்ள எச்சரிக்கையில், அவை ஒருவேளை நனவாகிவிட்டால், அதனால் ஏற்படும் பாதிப்பின் அளவு மனிதகுலத்தின் மீதான ஒரு பேரழிவாகவே அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் பேரழிவு அச்சுறுத்தல்களாகக் கருதப்படும் பிற அபாயங்களில் காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன், குழந்தைப் பருவ ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் காலநிலைச் சீர்குலைவு ஆகியவை அடங்கும். அத்துடன், மரபுசார் மோதல்கள்,
குறைந்துவரும் வெளிநாட்டு உதவிகள், அதிக மதுப் பழக்கம், உயர் இரத்த அழுத்தம், வருமான ஏற்றத்தாழ்வு, குறைந்த கல்வித் தகுதி, இயற்கையாக ஏற்படும் பெருந்தொற்றுகள், உடல் பருமன், மோசமான மனநலம், புகைப்பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற முதுமை ஆகியவையும் இதில் அடங்கும்.
மேலும், அதிக வருமானம் கொண்ட பகுதிகளில் உடல் பருமன் மற்றும் மோசமான மனநலம் போன்ற தொற்றா நோய்கள் முக்கிய அச்சுறுத்தல்களாக உள்ளன; அதேவேளையில், குறைந்த வருமானம் கொண்ட பகுதிகளில் குறைந்த கல்வி நிலை போன்ற காரணிகளால் உடல்நலம் மோசமடையும் சூழல் உள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல முக்கிய நன்கொடை நாடுகள், கடந்த ஓராண்டில் உதவிக்கான செலவினங்களில் பெரும் குறைப்புகளை அறிவித்துள்ளன. 35 நிபுணர்களைக் கொண்ட இக்குழுவின் கண்டுபிடிப்புகள், ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறும் உலக சுகாதார உச்சிமாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பகிரப்படும்.
அடையாளம் காணப்பட்ட 17 அச்சுறுத்தல்களை மறுமதிப்பீடு செய்வதற்கும், புதிய தரவுகளையும் புதிதாக உருவாகும் அபாயங்களையும் இணைப்பதற்கும், அவர்களின் மதிப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் மற்றும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட வழிகள் மூலம், இடர்பாடுகள் நெருக்கடிகளாக உருவெடுப்பதற்கு முன்பே அவற்றைக் கையாள வேண்டும் என்று ஆய்வாளர்கள் உலகத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளனர்.





















