முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தைச் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.
நேற்று பிற்பகல் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.





















