அது என்னவோ தெரியவில்லை; காலகாலமாகக் கண்ணீர்தான் தத்துவத்திற்குத் தாய்ப்பாலாக இருந்து வந்திருக்கிறது.
மனிதன் சிரிக்கிற போது பொய் பேசுகிறான்; அழுகிற போது தான் உண்மை பேசுகிறான்.
அந்த அழுகைக்கும் கொஞ்சம் அலங்காரம் கொடுத்தால் அது கலையாகி விடுகிறது.
நான் எழுதிய இந்தப் பாடல் மனித உறவுகளையே மறுபரிசீலனை செய்து கொடுத்தது.
மருத்துவமனையில் படுத்திருக்கிறான் அந்த வாலிபன்.
மரணம் அவனை அங்குலம் அங்குலமாக அரித்துக் கொண்டிருக்கிறது.
மரணம் அவனைக் கொள்ளை கொண்டுவிடாமல் அவனுடைய காதல் மனைவி கால் மாட்டில் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறாள்.
தவணை முறையில் போய்க் கொண்டிருக்கும் அவனது உயிரைக் காக்கத் தேவையானது மருந்தோ, பணமோ அல்ல.
ஒரே ஒரு கிட்னி.
அவன் உடம்போடு ஒட்டக்கூடிய ஒரே ஒரு கிட்னி.
கிட்னி கேட்பதற்கு முன் கை கொடுக்க உறவுகளில்லை.
கிட்னி கேட்டவுடன் கைவிட்டு விட்டன.
அவனை விசாரிக்க வந்தவர்கள் கூட விலகி விட்டார்கள்.
கிட்னி என்பது சிறுநீரைப் பிரிக்கும் உறுப்பு.
ஆனால் அவனைப் பொறுத்த வரையில் அது உறவுகளைவே பிரிக்கும் உறுப்பாகி விட்டது.
நமது உறவுகளெல்லாம் பொருளாதார உறவுகள்தாமே!
புன்னகை என்பது உதட்டுக்குப் புறப்படும் முலாம்தானோ!
உறவுகளெல்லாம் வெறும் நிழல்கள் தாம்.
நிழல்கள் ரத்ததானம் செய்வதில்லை.
அவனோடு ரத்த சம்பந்தமுடைய யாருக்காவது இதயத்தில் ஈரமிருக்காதா என்று அவள் கிட்னி பிச்சை கேட்கிறாள்.
தூரத்தில் தொடுவானம் தரையைத் தொடுவது மாதிரி இருக்கும்.
கிட்டப்போனால் அது ஒரு மாயை என்பது விளங்கும்.
உறவு என்பது தொடுவானம் தான் என்பது அவள் உணர்ந்து கொள்கிறாள்.
அவளது கடைசிக் கண்ணீர்த் துளியோடு அவளது நம்பிக்கையும் வற்றி விடுகிறது.
தான் செத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் அவனது கண்களுக்கு மங்கலாகத் தெரிகிறது.
"உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்பது கூட எழுத்துக்களின் சேர்மானங்களே தவிர இதய பூர்வமானதல்ல.
அடுத்தநாள் அவனுக்குக் கிட்னி கிடைக்கவில்லையென்றால் அவனது மூச்சுக்கு முற்றுப் புள்ளி கிடைத்துவிடும்.
மரணத்தின் முன்னிரவு.
மருத்துவமனையே மௌனத்தின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கு இரண்டு ஜீவன்கள் மட்டும் கண்களின் உறக்கத்தைக் காணாமல் போட்டு விட்டு விடிவெள்ளி போல் விழித்துக் கிடக்கின்றன.
இந்த நேரத்தில் அந்த இரவின் அத்தனை சோகத்தையும் சுமந்துகொண்டு ஒலிக்கிறது ஓர் அசரீரி பாட்டு.
அந்தப் பாட்டு-
கையில் ஒரு சாட்டையை எடுத்துக்கொண்டு நமது போலி உறவுகள் மீது விமர்சித்துக் கொண்டே வீசுகிறது.
மரணம் வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சிதான் என்று வாதாடுகிறது.
இதைப் பாடும் போது ஜேசுதாஸ் அவர்களின் கண்கள் கசிவதைக் கவனித்தேன்.
இனிய நண்பர் சுஜாதாவின்பெ காகிதச் சங்கிலிகள் "பொய் முகங்கள்" என்ற பெயரில் கலை வடிவம் கொண்டபோது அதில் இந்த அசரீரி.
இங்கு
நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்
எரிகின்ற தீபம்
ஒளிதரும் போதும்
விளக்கின் அடியில்
இருள் வட்டம் போடும்
தீபத்திற்கே இரண்டு முகங்கள்
மனிதர்க் கிங்கே எத்தனையோ?
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
கனவுக்குள்ளே கற்பனையோ?
கானல் நீரில் மீன்களைத்
தேடும் இந்த வாழ்க்கையோ?
•
கருவறை கூடக்
கல்லறை தானே
கல்லறை கூடக்
கருவறை தானே
வாழ்வும் சாவும் ஒன்றே என்றால்
சோகம் இங்கே வாராது
வாழும் போது சூழும் சுற்றம்
சாவில் வந்து சேராது
வந்து வாழ்ந்த வாழ்க்கையே
வான வில்லைப் போன்றது."
•
எனது மனம் கனமாக இருக்கிற போதெல்லாம், இந்தப்
பாடலை இரண்டு முறை போட்டுக் கேட்கிறேன்.
பாரம் இறங்கிப் பாதத்திற்கு வந்துவிடுகிறது.
கவிப்பேரரசு
வைரமுத்து


