வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும் இந்தியர் - விமானிக்கு அழைப்பு விடுத்த நெதன்யாகு
ப்ளைதுபாய் விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது இஸ்ரேல் பிரதமர் தங்கள் நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் தீப்பந்தம் ஏற்றுவதற்காக, இந்திய விமானி மற்றும் பிரதர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
ப்ளைதுபாய் விமானத்தை கடந்த செப்டம்பர் 30 அன்று ஓமன் விமானியான ஹமாம் அல் ஹம்மாமி கடத்த முயன்றார். அப்போது அவரிடம் இருந்து 180 பயணிகளை இந்திய விமானியான ஸ்மித் மச்சார் காப்பாற்றினார்.
இதையடுத்து ஓமன் விமானியிடம் கத்தி குத்து வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மச்சாரிடம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
அப்போது விமான அறையில் நடந்த நிகழ்வை விளக்குமாறு, இந்திய விமானியிடம் இஸ்ரேல் பிரதமர் கூறினார். இதையடுத்து மச்சார் பேசும்போது, “முதலில் ஓமன் விமானி என்னிடம் தொழுகை நடத்துமாறு கூறினார்.
இது எனக்கு புதியதாக இருந்ததால், நான் எதுவும் செய்யாமல் விமானி அறையில் எழுந்து நின்றேன். பிறகு அவர் என்னிடம் விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளையும் தொழுகை நடத்துமாறு கூறினார்.
பிறகு அவர் விமானி அறையில் தரையில் தொழுகை நடத்திக்கொண்டு இருந்தார். நான் அவர் முன்பு பின்புறமாக நின்றுகொண்டிருந்தேன். அப்போது என் தலையில் ஒரு பலமான அடி விழுந்தது.
உடனே நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன், என் கண்கள் மங்கலாக தெரிந்தது.
முதலில் அது விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என நினைத்தேன், பிறகு தான் எனக்கு தெரிந்தது, அது என்னுடைய சக விமானி என்மீது தாக்குதல் நடத்தியதால் விழுந்த அடி என்று உணர்ந்தேன்.
இதையடுத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து, தரையை நோக்கி வேகமாக சென்றது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தத்தை நான் கேட்டேன்.
அப்போது நான் என்னிடம், எப்படியாவது விமானியின் அறையை திறக்க வேண்டும் என சொல்லிக் கொண்டேன். விமானி அறையின் கதவானது உள்பக்கத்தில் இருந்து திறக்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவர் விமானியின் அறையை வெளியே இருந்து திறக்க வேண்டுமென்றால், அதற்கு பாஸ்வேர்டு தேவைப்படும். அந்த பாஸ்வேர்டை உள்ளிட்டு, விமானியின் அறையை என்னுடைய சக ஊழியர்கள் வெளியில் இருந்து திறக்க முயன்றனர்.
ஆனால் ஓமன் விமானி, அதை திறக்கவிடாமல் உள்ளிருந்து தடுத்துக்கொண்டே இருந்தார். பிறகு நான் மன தைரியத்தை வரவழைத்து கொண்டு, அவருடன் போராடி விமானி அறையின் கதவிற்கு அருகே சென்றேன்.
முதலில் என் தலை மீது பலமான அடி விழுந்ததால், என்னால் எனது முழு பலத்தையும் கொடுத்து அவருடன் போராட முடியாமல் போனது.
இதையடுத்து நான் கதவை திறந்ததும், உள்ளே வந்த ஊழியர்கள் துணை விமானியை கட்டினர்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தங்களின் மன உறுதி தான் பயணிகளை காப்பாற்றியதாகவும், தாங்கள் ஒரு ஹீரோ என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
மேலும் அவர், இஸ்ரேலில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், தீப்பந்தம் ஏற்றுவதற்கு வருமாறு கேப்டன் ஸ்மித்துக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என்றும், அவருடன் நீங்கள் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேல் சுதந்திர தின நிகழ்வில் தீப்பந்தம் ஏற்றுவது, இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் செய்த வீரதீர செயலால் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியர் அதை செய்ய உள்ளதாகவும் நெதன்யாகு கூறினார்.





















