காமராஜர் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்வு இதுதான்..
தமிழ்நாடு
அக்.1 சிவாஜிகணேசன் பிறந்தநாள்..
அன்று தன்னுடைய உண்மை தொண்டன் சிவாஜியின் வீட்டுக்குப் நேரில் சென்று நீ நல்லா இருப்பா என்று மனதார வாழ்த்தி ஆசிர்வாதம் செய்துவிட்டு வந்தார் இதுவே காமராஜரின் கடைசி நிகழ்வு..
தன் தலைவர், காமராஜர் இறப்பதற்கு முன்பாக ஒருமுறை வீடு தேடி வந்துள்ளார் என்பது அன்று சிவாஜிக்குத் தெரியாது. ஏன் காமராஜருக்கே நாளை நாம் இந்த உலகைவிட்டு விடைபெற்றுச் செல்ல இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கமாட்டார்.
மறுநாள்
அக்.2 காந்தி ஜெயந்தி. பல விழாக்களில் காமராஜ் கலந்துகொண்டு உரை நிகழ்த்த வேண்டும். அதை மனதில் அசைபோட்ட படி இரவு தூக்கத்திற்குப் போனார்.
விடிந்ததும்
திருமலைப் பிள்ளை வீட்டில் இடி விழ இருக்கிறது என யாரும் நினைக்கவில்லை. வழக்கமாக
அக்டோபர் 2 அதிகாலை விடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக இருந்தார் காமராஜ். மதியம் ஒரு மணிக்கு உணவு எடுப்பது வழக்கம். அன்று 1:30 ஆனது. ஆகாரம் எடுக்கவில்லை. உதவியாளர் வைரவன் வந்து அழைத்தார். போய் சாப்பிட்டார்.
ஆடம்பர உணவுகளை தன் வாழ்நாளில் எடுக்கக் கூடாது என இறுதிவரை வாழ்ந்தவர். சாம்பார், கொஞ்சம் காய்கறி, கூட ரசம். இதுதான் பிடித்த உணவு. சாம்பாரில் கத்தரிக்காய் இருந்தால் போது. ருசித்து சாப்பிடுவார். வெறும் கத்தரிக்காய் கொடுத்தால் கூட முகம் சுளிக்காமல் சுவைப்பார். அப்படித்தான் அன்றும் உண்டார்.
வழக்கத்திற்கு மாறாக உடல் முழுக்க வேர்வை. சட்டை நனைந்து வழிந்தது. வைரவனிடம் சொன்னார். அவர் ஒன்றும் இல்லை என ஆற்றுப்படுத்தினார்.
அறையில் போய் படுத்தார் பெரியவர். உடம்பெல்லாம் அருவியாக வழிந்தது வியர்வை. உதவியாளரை அழைத்தார். உள்ளே போன வைரவன் அரண்டு போனர். தலை சில் என்று இருந்தது. மருத்துவரை அழைக்கச் சொன்னார். அறையைவிட்டு வெளியேறிய வைரவனை விளக்கை அணைத்துவிட்டுப் போ என்றார் காமராஜ்.
உடனடியாக டாக்டர் செளரிராஜனுக்கு போன் போனது. அவர் வீட்டில் இல்லை. அடுத்து செயராமனுக்கும் போனது. அவர் ஒரு மணிநேரத்தில் வந்தார். அறைக்குள் சென்றார். வழக்கமாகக் கேட்கும் குறட்டை ஒலி எழவில்லை. செயராமன் அச்சத்தில் நெருங்கி கர்மவீரனைத் தொட்டார். உடல் அசையவில்லை. உடம்பைக் குலுக்கினார். பேச்சு மூச்சு இல்லை. இதயத்தை அழுத்தினார் அசரவில்லை.
கதறிக் கொண்டு வெளியே வந்த செயராமன் ஸ்டெதாஸ்கோப்பை தரையில் வீசி எறிந்தார். காமராஜ் நம் காலை வாரிவிட்டார் என் கதறி அழுதார். விளக்கை அணைக்கச் சொன்னது வெறும் வார்த்தை இல்லையா? சமிக்ஞையா? என வானம் இடிந்துவிழும்படி வைரவம் கத்தினார். திருமலைப் பிள்ளை வீதியைத் தாண்டி செய்தி பரவியது.
அக்டோபர் அன்று காந்திக்கு மட்டுமே விழா எடுக்க வேண்டும் எனக் கட்டளைப் போட்டவர், அதே நாளில் தன் உயிரைக் கொடுத்தார். அதேநாளில் அவர் வாழ்வை முடித்தது இயற்கை. காமராஜ் மறைந்த போது வைரவன், "தலைவர் உடம்புக்கு ஒரு வியாதி இல்லை. மனம் தான் மரணத்திற்குக் காரணம்" என்றார்.
முதல் நாள் சிவாஜி வீட்டுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லச் சென்ற காமராஜ் வீட்டுக்கு அடுத்த நாள் துஷ்டி விசாரிக்க வந்தார் சிவாஜி. அவர் மட்டுமா வந்தார்கள் வான தேவன் விடாமல் மழையாக வந்தான். இரண்டு நாளில் 20 லட்சம் மக்கள் வந்தார்கள். 2 பேர் செய்தி கேட்டு மாரடைப்பில் மரணமடைந்தனர். 4 பேர் வாகன நெரிசலில் உயிரைவிட்டனர். ஒரு சகாப்தம் அன்றுடன் முடிவுக்கு வந்தது.
Rukmani Palaniappan





















