பிரான்சில் வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்.. 2,000 பேர் கைது
பிரான்சில் ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, வகுப்பறைகளில் நெரிசல் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக பிரான்ஸ் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
போராட்டங்கள் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமையன்று) 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
கடந்த மாதம் பாரிஸ் பகுதியில் போராட்டங்கள் தொடங்கின. பின்னர் அவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவின.
அண்டை நாடான பெல்ஜியத்திலும் மாணவர்கள் வீதிகளில் இறங்கினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பல பள்ளிகளின் நுழைவாயில்களை மறித்தனர்.
இரண்டு இடங்களில் பள்ளிகளுக்கும் தீ வைக்கப்பட்டது. காவல்துறை நடவடிக்கையின் போதும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் பலர் காயமடைந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் உண்மையில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்தானா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், தீவிர இடதுசாரி அரசியல் ஆர்வலர்களே போராட்டங்களைத் தொடங்கியதாக பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெ கோர்னேயின் அலுவலகம் குற்றம் சாட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. மாணவர் தலைவர்கள் இதை மறுத்தனர்.
மாணவர் அமைப்புகள், அதிக ஆசிரியர்களை நியமிக்கவும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பள்ளிக் கட்டிடங்களின் பாழடைந்த நிலையைச் சரிசெய்யவும், வகுப்பறை நெரிசலைக் குறைக்கவும், கற்றல் சூழலை மேம்படுத்தவும் கோரி வருகின்றன.























