• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க உளவுத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு சோதனை - வியந்து பேசிய முன்னாள் அதிகாரி 

மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 2019ல், இந்தியா நடத்திய ஒரு விண்வெளி சோதனை உலக கவனத்தை ஈர்த்தது.

மார்ச் 27, 2019 அன்று, 'மிஷன் சக்தி' திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 300 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ஒரு செயற்கைக்கோளை குறிவைத்து, இந்தியா செயற்கைக்கோள் எதிர்ப்பு (ASAT) ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

தற்போது, ​​அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர், அந்தச் சமயத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, இந்தச் சோதனை அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்குள் ஏற்படுத்திய பெரும் சலசலப்பை விவரித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரஷ், ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் இந்தச் சம்பவத்தை விவரித்தார்.

இந்தியாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க உளவுத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக க்ரஷ் கூறினார்.

அந்த நேரத்தில் தான் அமெரிக்க தேசிய உளவுத்துறை அலுவலகத்தின் செயல்பாட்டு மையத்தில் பணியில் இருந்ததாக அவர் கூறினார்.

ஒடிசா கடற்கரைக்கு அருகிலுள்ள விமானப் பயணங்களுக்கு இந்தியா ஒரு NOTAM அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதன் மூலம், அப்பகுதியில் ஒரு ஏவுகணை சோதனை நடைபெறுவது குறித்து அமெரிக்கா அறிந்திருந்தது.

இருப்பினும், க்ரஷின் கூற்றுப்படி, அந்தச் சோதனை ஒரு செயற்கைக்கோளைக் குறிவைக்கும் ஏஎஸ்ஏடி (ASAT) வகை ஏவுகணையாக இருக்கும் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்தது.

சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அறிந்ததும், அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

செயற்கைக்கோள் உடைந்ததால் உண்டாகும் விண்வெளிக் குப்பைகள் தங்களது செயற்கைக்கோள்களைதாக்குமா என்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டது.

சிதிலங்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுமாறும், ஏதேனும் அமெரிக்க செயற்கைக்கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையை மாற்ற வேண்டியிருக்குமா என்று பார்க்குமாறும் உடனடியாக ஆய்வாளர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் எந்தவொரு நாட்டையும் குறிவைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும், இது தனது விண்வெளிச் சொத்துக்களின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு செயல் விளக்கம் என்றும் கூறியது. விண்வெளியை ஆயுதமாக்குவதை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டையும் இந்தியா வலியுறுத்தியது.

மிஷன் சக்தியின் கீழ் 2019 இல் நடத்தப்பட்ட சோதனை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதுடன், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை இடைமறிக்கும் இந்தியாவின் திறனையும் நிரூபித்தது.

மிஷன் சக்தி திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் ASAT திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியா இணைந்தது.

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்குப் பிறகு, இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்தது. அதுபற்றி தற்போது அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply