முல்லைத்தீவில் வனவளத்திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் - ரவிகரன் எம்.பியின் கோரிக்கை
இலங்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்படாமல் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (01) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த 2023.02.17ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனின் தலைமையிலும், 2023.06.01ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்கவின் தலைமையிலும் கூட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்தக்கூட்டங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்ட செயலாளர், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலாளர்கள், குறித்த பகுதிகளுக்குரிய கிராம அலுவலர்கள் ஆகியோர் இணைந்து களவிஜயங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தக் களவிஜயங்களுக்கு அமைவாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 3,013.96 ஹெக்டயர் காணிகளும், புதுக்குடியிருப்பில் 5,131.13 ஹெக்டயர் காணிகளும், ஓட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் 7,266.04 ஹெக்டயர் காணிகளும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 399.80 ஹெக்டயர் காணிகளும், மாந்தை கிழக்கில் 1,231.37 ஹெக்டயர் காணிகளும், மணாலாறு பிரதேசத்தில் 427.28 ஹெக்டயர் காணிகளும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவரசிகள் திணைக்களங்களிடமிருந்து விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 17,469.58 ஹெக்டயர் காணிகள் அதாவது ஏறத்தாள 43,149.86 ஏக்கர் காணிகள் ஆவணங்கள் கோரப்படாமல் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களிடமிருந்து விடுவிக்கப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களின் கையகப்படுத்தலிலுள்ள, ஏற்கனவே விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
குறிப்பாக யுத்த நிலமைகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் இவ்வாறு காணி ஆவணங்களைக் கோரவே முடியாது. இவ்வாறு யுத்த நிலைமைகள்மூலமும், இராணுவ நடவடிக்கைகள்மூலமும் வெளியேற்றப்பட்ட மக்களிடம் ஆவணங்கள் கோரப்படக்கூடாது.
ஆவணங்கள் கோரப்பட வேண்டாம்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்திடமிருந்து மேலதிகமாக 3043.23 ஹெக்டயர் காணிகளுக்குத்தான் அப்போது மக்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் காணிகளுக்கு ஆவணங்களை வழங்குவதைப்பற்ற பரிசீலிக்கமுடியும்.
இத்தகைய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலுமிருந்து மொத்தம் 10,462.84ஹெக்டயர் நிலங்களை மேலதிகமாக தமக்குத் தருமாறு வனஇலாக தற்போது கோரியிருப்பதாக அறியமுடிகின்றது. ஒருபோதும் எம்மால் வனவளத் திணைக்களத்திற்கு எம்மால் காணிகளை வழங்க முடியாது.
அதேவேளை ஏற்கனவே வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 43,149.86 ஏக்கர் காணிகளுக்கும் மக்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்படாமல் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமாக முன்மொழிகின்றேன” என தெரிவித்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்மொழியப்பட்ட குறித்த தீர்மானம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















