போராட்டம் திரைப்படத்திற்கு வலுச்சேர்ப்போம் - மக்களை அணிதிரளுமாறு ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் அறைகூவல்
இலங்கை
நிலத்திலும் புலத்திலும் தற்போது சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டு வரும் 'போராட்டம்' திரைப்படத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், மக்கள் பலமாய் அணிதிரள வேண்டும் என பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'போராட்டம் - பலமே ஆயுதம்' எனும் வலுநிலைக்கமைய, நிலத்திலும் புலத்திலும் எமக்கான திரைத்துறை முயற்சிகளில் நாம் வளர்நிலை அடைந்து வருகின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், தமிழர் தாயகத்தில் உருவாக்கம் பெற்ற 'போராட்டம்' திரைப்படம் ஒக்டோபர் 2ம் திகதி முதல் உலகமெங்கும் திரையிடப்பட்டு வருகின்றது.
இத் திரைப்படத்தின் தொடர் திரையிடலுக்கான ஆதரவினையும் ஊக்கத்தினையும் வழங்க வேண்டிய கடப்பாடு எமது மக்களுக்கு உள்ளது.
எமக்கான திரைத்துறை முயற்சிகளில் நாம் பலம்பெற பார்வையாளர்களாக கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






















